தமிழில் பிள்ளைகளுக்கு பெயரை வையுங்கள்.

0
549

(படுவான் பாலகன்) தமிழில் பேசினால் நாகரீமற்றவர்கள் என்கின்றோம். பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க தயங்குகின்றோம். தமிழில் பிள்ளைகளுக்கு பெயரை வையுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா அண்மையில் நடைபெற்ற போது, இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர், அங்கு உரையாற்றுகையில், அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இடம்பிடித்திருக்கின்றது. இதற்கு காரணம் தனித் தமிழை நாம் பேசுவதில்லை. அவ்வாறு பேசுபது நாகரீகமற்றது என எண்ணுகின்றோம். இதனால் நாகரீகம் என நினைத்து ஆங்கிலத்தினை கலந்து பேசுகின்றோம். இதன்காரணமாக தமிழ்மொழி அழிவடைந்து செல்கின்றது. ஆங்கிலம் தெரியாது எனக்கூறுகின்றோம். ஆனால் ஆங்கிலம் இல்லாமல் தமிழ்பேசுபவர்கள் மிகமிக அரிது. பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போதும், தமிழில் பெயர் வைப்பதில்லை. பிள்ளைகளுக்கும் தமிழில் பெயரை வையுங்கள்.
தற்போதைய தாய், தந்தையருக்கு உபகதைகள் பற்றி தெரியாது. இதனால் பிள்ளைகளுக்கும் உபகதைகளை கூறுவதில்லை. உபகதைகள் ஒவ்வொன்றினுள்ளும் பல்வேறு கருத்துக்கள் உள்பொதிந்துள்ளன. இவ்வாறானவற்றையும் வளர்க்க வேண்டும். பெரும்பாலான பிள்ளைகள் இன்றைய சூழலில் அறநெறி வகுப்புக்களுக்கு செல்வதில்லை. இதனால் ஒழுக்கத்தினை மாணவர்கள் பின்பற்றுவதும் மிகக்குறைவு. பிள்ளைகள் விளையாடும் வயதில், கல்வியை திணிக்கின்றனர். அதுவும் ஆங்கில கல்வியை அதிகம் திணிக்கின்றனர். பிள்ளைகளை மகிழ்ச்சிகரமாக விளையாட விடாது. மனநோயாளர்களாக பிள்ளைகளை உருவாக்கி கொண்டிருக்கின்ற சூழலிலே தற்போது இருந்து கொண்டிருக்கின்றது. என்றார்.