கொதிநிலையில் திருகோணமலை ,அம்மணியின் அட்டகாசம் என்னசெய்யப்போகுது கூட்டமைப்பு தேர்தலையும் பாதிக்குமா?

0
1610

வடகிழக்கில் யாழ் மண்ணிற்கு அடுத்தாற்போல் எப்போதும் கொதிநிலையில் இருப்பது திருகோணமலை மாவட்டம் என்பது தொடர்கதையாகி வந்திருக்கிறது

தற்போதைய நல்லாட்சி என்று கருதப்படும் இவ்வாட்சியில் அவ்வாறான விடயங்களை குறைப்பதற்கு பலரும் பகிரதப்பிரயர்த்தனம் செய்து வரும் நிலையில்,அதனை கூட்டுவதற்கான திரைமறைவு முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதா? என்ற பலமான கேள்வியை மூதூர் கிழக்கில் உள்ள பூர்வீக பிரதேசமான மத்தளைமலை சூடைக்குடா குன்றத்து முருகன் ஆலய விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சனைவிவகாரத்தில் தொல்பொருள், பௌத்த ஆலயவாதங்கள்,திடிரெனமுளைக்கும் புத்தரின் சிலை விடயம் என்பன தொட்டவுடன் சாக்கடிக்கும் மிகவும் முக்கியமான தாக்கத்தை செலுத்தும் விடயமாகவே தமிழ் மக்கள் உணர்ந்துள்ள விடயமாகும்.

அந்தவகையில் நல்லாட்சிக்காலம் சிறந்ததாக சர்வதேசிய மற்றும் தேசியமட்டத்தில் கூறப்பட்டுவந்தாலும் வடகிழக்கில் அதன் தாக்கம் பழைய குருடி கதவைத்திறடி என்றபோக்கில் செல்வதனை உறுதி செய்ய முயற்சிக்கின்ற நிலமையும் இல்லாமல் இல்லை.

திருகோணமலையில் பழம்பெரும் பெருமை,வரலாற்றைக்கொண்ட, புகழ்மிக்க, உலக மக்கள் அறிந்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பௌத்ததீவிரவாத தாக்கம் நல்லாட்சிக்காலமான இந்த ஆட்சிக்காலத்திலும் தொடராக செயற்படுத்தப்பட்ட வண்ணமே வந்திருக்கிறது.

மாவட்டத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான கதைகள் உள்ளன. மாவட்டமெங்கு பௌத்த சின்னங்கள் அந்தளவிற்கு விதையாக விதைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு மதவாத விடயமாக கூறமுற்பட்டாலும் இது ஒரு பேரினவாத நடவடிக்கையாகவே சிறுபான்மை சமூகத்தினால் பார்க்கப்பட்டு வருவதுடன் பேரினவாதமும் தமிழ் மக்கனின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க பயன்படுத்தும் அதன் ஆயுதமாகவே இதனை பாவித்து வருகின்றது.இது ஒரு தெளிவான வரலாறு

யுத்தத்தின் முன்னர் இது தொடர்பான பல வரலாற்று விடயங்கள் இருந்தாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ,இதன்தாக்கம் மேலும் அதிகமாக சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்பட்ட வண்ணமே உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 2006.சித்திரை 24ம்திகதியுடன் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.அன்று குறித்த மூதூர் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கிராமமக்களும் அடியோடு ஓட ஓடவிரட்டப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குள் இக்கிராமங்கள் இருந்தன.இதனால் கண்மூடித்தனமாக செல்த்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் வரை ஓடிய மக்கள்; பின்னர் மீழக்குடியமர்த்துவதில் கடும்பகிரதப்பிரயர்த்தனம் மேற்கொள்ள வேண்டிய நிலமை இருந்தது.உலகறிந்த கதை.

அதனடிப்படையில் குறித்த சூடைக்குடா,அருகில் உள்ள கூனித்தீவு,நவரெட்ணபுரம் கிராமங்களைச்சார்ந்த மக்கள் 8வருடங்களின் பின்னர் தமது அழிந்த இடங்களுக்கு வந்தனர். அதற்கருகில் அமைந்துள்ள சம்பூர் பிரதேசம் இறுதியாக 9வருடங்களின்பின்னர் பல்வேறு போராட்டங்களின் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் வரை சென்ற நிலையில், அம் மக்கள் தற்போதைய ஆட்சியில் வந்து சேர வாய்பேற்பட்டது.வந்தாலும் இன்னும் அவர்களது காணி உறுதிப்பாடுகள்வாழ்வாதார நிலமைகள் என குற்றம்சாட்டப்பட்ட வண்ணமுள்ளன.அவை நிறைவடையவில்லை.அங்குள்ள சிறிமுருகன் ஆலயம் காணிகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில் குறித்த சூடைக்குடா பிரதேசம் என்பது கடலோரப்பிரதேசமாகையால் கடந்த 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியினாலும் பாதிக்கப்பட்டது. அன்று தொட்டு இன்றும் தமது பூர்விக இருப்பிடம் மற்றும் தொழில் இடதத்திற்கு செல்வதில் பலவாரான தடைகள் இருப்பது பற்றி மக்கள் பல்வேறு வகையில் ஆளுநர் உள்ளிட்ட அரச மட்டத்துடன் பேசி வருகின்றனர்.

இப்பிரதேசம் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தின் நகரை அண்மித்ததாக உள்துறைமுகம் இருக்க அடுத்தாற்போல் வெளித்துறைமுகம் பெருங்கடலுடன் பெரும் குடாக்கடலாக தொடர்புபடும் வகையில் உள்ளது.

வெளித்துறைமுகத்தின் கடவாய்யில் சூடைக்குடா அமைந்துள்ளது. ஒருபுறத்தில் கடற்படை மலையும் மறுபுறத்தில் சூடைக்குடா மலையும் இருகடைவாய்களாக பாரக்கமுடியும். பெருங்கடல்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கான வெளிச்சவீடு குறித்த சூடைக்குடாவிலேயே அமைந்துள்ளது.

அந்த வகையில் இப்பிரதேசமும் மலைக்குன்றும் மிகவும் பிரபல்யம்வாய்ந்தது மட்முன்றி பெறுமதி வாய்ந்ததுமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மலைக்குன்றில் இருந்த குன்றத்து முருகன் ஆலயமும் பதிவு செய்யப்பட்ட ஆலயமாகும்.

இதற்கும் மறு வடக்கு எல்லையில் உள்ள அருள்மிகு திருக்கோணேஸ்வரத்திற்குமிடையில் தொடர்பு பட்டபல வரலாற்று தொடர்புகள் உள்ளதாக இங்குள்ளவர்கள்கருதுகின்றனர்.

இந்த நிலையில் யுத்தம் காரணமாக சிதைவடைந்த நிலையில் இருந்த இந்த முருகன் ஆலயம் அண்மையில் புனரமைக்கப்பட்டு சிறியளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறி இயல்பு நிலமைக்கு வரமுயற்சிக்கப்பட்டு வருகின்றது.

இதனுடைய கும்பாபிஷேகம் கூட மிகவும்பிரபல்யமாகவே நடந்தேறின. குறித்த முருகன் சிலைகள் திருக்கோணேஸ்வரத்தில் இருந்து உர்வலமாக நகர்,கிண்ணியா,மற்றும் மூதூர், வழியாக கொண்டு வரப்பட்டு முறையாகவே நடாத்தப்பட்டன.

திரைமறைவில் மேற்கொள்ளப்படவில்லை. இப்பிரதேசம் மிகுந்த குடிநிர் தட்டுப்பாடுள்ள பகுதியாகையால் முன்னாள் கிழக்கு மாகாண மீழகுடியேற்ற அமைச்சரும் கல்வி அமைச்சருமான சி தண்டாயுதபாணி தனது நிதியில் இருந்து மக்களின்கோரிக்கைக்கிணங்க இரண்டரை லட்சம்ரூபாயை ஒதுக்கி கிணறு அமைக்க மூதூர் பிரதேச சபைமூலம் உதவியிருந்தார். அந்தக்கிணறு அமைக்கும்பணி நிறைவடைந்து கட்டுமானம் செய்வதற்கான ஆயத்தம் நடைபெற்ற வண்ணமிருந்தன.

இந்நிலையில் குன்றத்து முருகனின் ஆலய சுற்றுப்பிரகாரங்கள் அமைக்கப்படவேண்டிய தேவைகருதி அதற்கான சில பணிகளை ஆலய நிர்வாகம் தங்களது தகுதிக்கேற்ப செய்த வண்ணமிருந்தனர்.

இதனடிப்படையில் ஆலயசூழலில் ஆகம முறைப்படி பிள்ளையார் உள்ளிட்ட பரிவார மூர்திகளுக்கான நிலையான இடங்களை தெரிவு செய்வதற்கான துப்பரவு பணிகளை மேற்கொண்டபோது ஆலயத்தின் அருகில் இருந்த மண்புட்டிகள் அகற்றப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் காணப்பட்ட விடயங்கள் தொல்பொருட்கள் மற்றும் அதில் பௌத்த ஆலயம் அமைந்திருந்த இடம் என்ற வாதத்தை அங்கு கடந்த வாரத்தில் வெளியிடங்களில் இருந்து வந்த பௌத்த துறவிகள் சொல்லமுற்றபட்டனர்.

முற்றிலும் 100 வீதம் தமிழ் மக்கள் வாழும்பகுதியில் பிற மாவட்டங்களில் இருந்து இவர்கள் திடிரென எவ்வாறு வந்தார்கள?;.என்பது உடன் புரியவில்லை. இருந்தாலும் இவர்கள் குறித்த தினத்தில் ஆலயவளாகத்தில் நடந்து கொண்டமையும் அங்கிருந்த மக்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.

மிகவும் பக்திசிரத்தையுடன் வழிபடும்தமது ஆலயத்தின் முக்கிய பகுதிகளில் குறித்த பௌத்த துறவிகள் செருப்புடன் உலா வந்ததுடன் பின்னுள்ள அழகான கடற்காடசிகளை பார்த்து படங்களையும் எடுக்க முற்பட்டனர். இதனால் மக்களும் அவர்களுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டனர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்தனர்.

இந்நிலையில் உடன் விரைந்த குறித்த துறவிகள் சம்பூர் பொலிஸ் நிலயம் சென்று தமது பௌத்த ஆலயம் இருந்த இடம் புல்டோசர் இட்டு அழிக்கப்பட்டதாக முறையிட்டதுடன்.அதனை தடுப்பதுடன் பாதுகாக்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.

சிங்கள ஊடகங்களுக்கும் தமது விகாரை அழிக்கப்பட்டதான செய்தியாக வெளியிட்டனர். இந்நிலையில் மூதூர் நீதிமன்றத்தை அணுகிய சம்பூர் பொலிசார் 19.12.2017இல் ஆலய வேலைகள் அனைத்தையும் நிறுத்தவதற்கான தடையை பெற்றனர்.

.மறுநாள் இதனை நேரடியாகச்சென்று ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மக்களிடம் நிலமையை கேட்டறிந்த நிலையில் தொல்பொருள் பிரிவிற்குப் பொறுப்பானமத்திய அமைச்சரும் கல்வி அமைச்சருமானவருக்கு தனது உண்மையான நிலமையை விளக்கி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

யுத்தகாலத்திற்கு முற்பட்ட காலத்தில் பிரதேசத்தில் தனது இளமைக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்இங்கு ஆசிரியராக இருந்தவர் என்ற நிலையிலும் தனது மக்களுடனான வரலாற்று பகிர்வை வைத்தும் இது தொல்பொருள் இருந்தபகுதி அல்ல .மட்டுமன்றி எந்த வித பௌத்த ஆலயங்களோ, சின்னங்களோ இப்பகுதியில் இருந்ததில்லை என்பதனையும் ;விளக்கிஅக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 22.12.2017 அன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரொகிதபொகல்லாகம,மற்றும் அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார உள்ளிட்ட உயர்மட்ட அரசஅதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆராயவந்திருந்தனர்.

இங்கும்  ஒரு துரதிஸ்ரமான சம்பவமொன்று நடந்தேறி பொது மக்களை விசனப்படுத்திவிட்டுள்ளது. குறித்த குளுவில் மேலத்தேய நாகரிக உடையில் ஒரு பேரின பெண்மணியும் வந்துள்ளார். அவரும்பௌத்த துறவிகள் நடந்துகொண்டது போன்று ஆலயத்திற்குள்  செருப்புடன் உலாவந்ததுடன் மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டமுற்பட்டதனால் மக்கள் சற்று பதற்றமடைந்ததுடன் ‘எங்களுக்கு முருகன் வேண்டும். எங்களுக்கு காளியாச்சி அருகில் துணையுள்ளாள் அவளின் துணைவேண்டும்” என கத்த முற்பட்டனர். இதனால் சற்று அமைதியின்மை ஏற்பட்டதுடன் குறித்த பெண்ணை அங்கிருந்து வெளியேறுமாறும் மக்கள் கோசமிட்டனர்.இதனை பின்னர் பொலிசார் ஒரு வாறு கட்டுப்படத்தினர். இது பல சமூக வலைத்தளங்களிலும் ஊலாவந்தவண்ணமுள்ளன.

இந்நிலையில் மறுபுறத்தில் விடயங்களை ஆராய்ந்த ஆளுநர் நீதிமன்ற ஆணைப்படி வேலைகள் எதையும் தற்சமயம் செய்ய வேண்டாம் குடிநிர் கிணறு வேலையையும் நிறுத்துங்கள். ஓருவாரத்திற்குபவுசர் மூலம் குடிநிர் வழங்க பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கும் .அரச திணைக்கள விசாரணைகள் முடிந்தவுடன் ஏனைய விடயங்களை மேற்கொள்ளலாம் என தெரிவித்து சென்றனர் என கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலமை என்னவென்றால் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் இக்குழுவினர்  குறிவைத்து இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றினால் அதனை முடித்து விடுவது வரலாறாகவுள்ளன.

உதாரணமாக நல்லாட்சிக்காலத்தில் நடந்த சாம்பல்தீவு சந்தி புத்தர்சிலை விவகாரம்,கிண்ணியா மாபிள்வீச்சந்தி; பாதையில் வைக்கப்பட்ட புத்தர்சிலை விவகாரம்.குச்சவெளியில் உள்ள செம்பீஸ்வரர் ஆலயம் ஏன்பன வற்றைக்கூறலாம் கன்னியா,இலங்கைத்துறைமுகத்துவாரம்முருகனாலயம்,;, கல்லடி மலைநீலியம்மன், என்பன நல்லாட்சிக்கு(2015) முற்பட்டகாலம்,

கிண்ணியாவிவகாரத்தை ஐதேகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்மரூப் உள்ளிட்டவர்கள் பலமாக எதிர்த்தும் எது வும் நடக்கவில்லை. ஆனாலும் மூதூர் கங்கு வேலி அகத்தியர்ஸ்தாபனத்தில் பிக்கு மார் மேற்கொண்ட இத்தகைய முயற்சி பாரிய மக்கள், மற்றும் சிவில் அமைப்புகளின் போராட்டம் காரணமாக முடிவக்கு கொண்ட வரப்பட்டிருந்தது.

ஆனாலும் தற்போதுள்ள நிலமையானது சம்பூர் விடுவிப்பின் மூலம் மக்கள் மனதை வென்ற நல்லாட்சி அரசின்; எண்ணக்கருவை முற்றாக தலைகீழக மாத்தியுள்ளது.

நீண்டகாலமாக இத்தகைய செயற்பாடுகள் காரணமாக பரந்தளவில் பாதிக்கப்பட்ட அனுபவமுள்ள தமிழ் மக்கள்,இழப்புக்களைச்சந்தித்தவண்ணமுள்ள மக்கள் சூடைகுடா குன்றத்து முருகன் அமைந்துள்ள இடத்தின் பொருளியல் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் காரணமாகஅதனை அபகரிக்க வழமைபோல் திரைமறைவில் நடக்கும் நாடகமாகவே இதனைப்பார்க்கின்றனர்.

ஆனாலும் சில அரசியல் சுயநல குழப்பவாதிகளின் முயற்சியாகவும் இது இருக்கலாம் ஆட்சியாளர்களுக்கு அபகீர்தியை ஏற்படுத்தவும் அழுத்தங்களை கொடுக்கவும் செயற்படுத்தப்படுபவை என நம்பினாலும் பௌத்த பின்னணிகள் எவ்வாறு ஆரம்பித்தாலும் ;முடிவில் அவர்களது எண்ணம் நிறைவேறியதுதான் வரலாறு.

திருகோணமலை மாவட்டம் அதற்குப்பேர்போன இடமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அதற்கு மிகப்பொருத்தமாக பாதிக்கப்பட்ட ஆலயம் திருக்கோணேஸ்வரர் எனலாம்.அதன்மூலம்தமது கடுமையான நிலப்பாட்டை அவர்கள் தமிழ் மக்களுக்கு புகட்டியவ ண்ணமே உள்ளனர்.

இதனால் இவ்விடயமானது பெரும் அச்சத்தையும் எரிச்லையும் மக்களுக்கு ஏற்படுதத்தியிருப்பதுடன் மறு புறத்தில் அரசியல் கட்சிகள் .தலமைகள் மீது வெறுப்பை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நல்லாட்சி என்ற நிலையில் உள்ள ஆளும் தரப்பு அதனுடன் ஒட்டி உறவாடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் இதற்கான முறையான தீர்வைத்தராத நிலையில் இவ்விடயம் தேர்தல் முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை செலுத்தப்போகின்றன என்றே பலரும் கருதுகின்றனர்.

..பொன்.சற்சிவானந்தம்..