மட்டக்களப்பில் சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பது சமூக ஆரோக்கியத்திற்கு கேடானது மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா

0
305

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.

“மகிழ்ச்சியான குடும்பம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 19.12.2017 யுவதிகள் மத்தியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து விழிப்புணர்வூட்டிய அவர் மேலும் தெரிவித்ததாவது@ கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற பதிவுகளின் அடிப்படையில் 59 சிறுமிகள், 21 சிறுவர்கள் உட்பட மொத்தம் 80 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

அதேவேளை இவ்வருடம் நொவெம்பெர் மாதம் வரையிலும் கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி 62 சிறுமிகள், 7 சிறுவர்கள் உட்பட 69 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

இது கவலையளிக்கும் விடயமாக உள்ளது.

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்வதற்கும், குடும்பங்களை, அயலவர்களை உற்றார் உறவினர்களை பராமரித்துக் கொள்வதற்கும் அவகாசம் இல்லாமல் அவஸ்தைப்படும் சூழ்நிலையக்குள் வாழ்க்கை இயந்திரமயமாகியுள்ளது.

இந்நிலையில் “மகிழ்ச்சியான குடும்பம்” என்ற கருப்பொருள் கனவாகவே மாறியுள்ளது.

அதனால், பரஸ்பரம் அன்பு, புரிந்துணர்வு, பகிர்வு என்பன இல்லாமற்போய், தனிமை, ஆதரவின்னை விரக்தி என்பன மேலோங்கி அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக குடும்பங்களிலுள்ள ஆண் பெண் சிறுவர்கள் ஆதரவற்ற நிலையை எதிர்நோக்குவதும் அதனால் அவர்கள் நெறிபிறழ்வுக்கு உட்படுவதும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்காலத் தலைவர்களான தற்போதைய சிறுவர் சிறுமியரை நாம் போஷ‪pத்துப் பராமரிக்காது விட்டால் அது இந்த சமூக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆண், பெண் சிறுவர்கள் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல் இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனை, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை என்பன கவலையளிப்பதாய் உள்ளது.

இத்தகைய ஒரு சூழ்நிலைக்குள் இளம் சந்ததியினரை இட்டுச் செல்வதை எவரும் அனுமதிக்கக் கூடாது. இந்த விடயத்தில் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புக் கூறலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையில் விற்பனையில் ஈடுபடுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.”

சுயநலமற்ற “மகிழ்ச்சியான குடும்பம்” என்பது இளஞ் சந்ததியின் ஒட்டு மொத்த எதிர்காலத்தையும் வடிவமைக்க உதவக் கூடியது. எனவே அதனை நோக்கி இலங்கையின் எல்லாச் சமூகங்களும் நகர வேண்டும் என்றார்.