பாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக செயற்திட்டம்

0
290

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மேலும் விரிவாக்கும் வண்ணம் அடுத்த ஆண்டிலிரந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கல்விக்கூடான செயற்திட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக எறாவூரில் திங்கட்கிழமை (18) கர்ப்பிணித் தாய்மார், பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அவர் விளக்கமளித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்@ ஆட்கொல்லி நேயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ளவர்களுக்கும் தெளிவாகக் கிடைக்கும் வண்ணம் நாம் விழிப்பூட்டலைச் செய்து வருகின்றோம்.

அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக வழங்கப்படுகின்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்திலுள்ள தாய், தந்தை, சகோதரர்கள், பாதுகாவலர் என்போருக்குச் சென்று சேரும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

தற்சமயம் அரசாங்கப் பாடசாலைகளில் பாலியல் கல்வி 9ஆம் தரத்திலிருந்து உட்புகுத்தப்பட்டுள்ளதால் எயிட்ஸ் நோய் பற்றிய இந்த விழிப்புணர்வை இன்னும் இலேசாகக் கொண்டு செல்ல வாய்ப்பேற்பட்டுள்ளது.

தரம் 9, 10, 11 வரையான மாணவர்களுக்கு சித்திரப் போட்டிகளை நடாத்தி அதற்கூடாக அவர்கள் எயிட்ஸ் பற்றி என்ன புரிதலைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டு அதிலிருந்து அவர்களுக்கான எயிட்ஸ் பற்றிய விழிப்பூட்டலைச் செய்யும் பாடசாலை தழுவிய திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தாண்டிலிருந்து தொடங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பின் ஐந்து கல்வி வலயங்களிலும் இந்தப் போட்டிகளை நடாத்தி கண்காட்சிகளை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எயிட்ஸ் ஒழிப்பின் முதற்கவனம் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் 15 வயதிலிருந்து தொடங்குகிறது.

இதேவேளை பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற இளம் ஆசிரியர்கள் பாலியல் கல்வியைப் போதிக்கும் விடயத்தில் தயக்கம் காட்டக் கூடும் என்ற கரிசனை உள்ளதால் எயிட்ஸ் நோய் பற்றி ஆசிரியர்கள் மத்தியிலான விழிப்புணர்வை மேம்படுத்த தேவை உள்ளது எனக் கருதப்படுகின்றது” என்றார்.