பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மாடியில் இருந்து கல் விழுந்ததில் தொழிலாளி படுகாயம்

0
287

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது மாடியிலிருந்த ‘புளக் கல்’ உச்சந் தலையில் விழுந்ததில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரியவருவதாவது, கட்டடத் தொழிலாளியொருவரின் உச்சந் தலையில் மூன்றாவது அடுக்கு மாடியிலிருந்து ‘புளக் கல்’ வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த தொழிலாளி படுகாயமடைந்தார்.

குறித்த தொழிலாளி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்ததோடு பிபிலை பிரதேசத்தைச்  சேர்ந்த அரவிந்த (23வயது) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஏறாவூர் மணிக்கூடு கோபுரச் சந்தியில் சென்ற ஒருவரது துவிச்சக்கரவண்டியில் இன்னொருவரது உந்துருளி கொளுவிக்கொண்டதால் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார். தலை பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.