போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்

0
617

சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடந்த இராணுவ இலக்கிய விழாவில், சிறிலங்காவில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த இராணுவ இலக்கிய விழா, கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்து, நேற்று நிறைவடைந்தது.

நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வில், 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட  ஒப்பரேசன் பவான் நடவடிக்கை தொடர்பாக கேணல் அனில் கௌல், உரையாற்றினார்.

“திரும்பி வராதவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பிளட்டூனில் இருந்தவர்கள் முற்றாகவே அழிக்கப்பட்டனர்.  அதில் இருந்த கோரா சிங் ஒருவர் மட்டும் தான் உயிர் தப்பினார்.

அவர் கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே ஆனார்.  ஏனென்றால் அவர் மாத்திரம் உயிருடன் இருந்தார். அவரது தோழர்கள் 35 பேர் உயிரிழந்தனர்.

போருக்காக நாம் பணம் கொடுத்து பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் போர் நல்லதல்ல.

இராணுவம் எந்தக் கேள்வியும் இன்றி தனது பணிகளை நிறைவேற்றும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

புதுனப்பலகை