கல்வியில் பாரம்பரியத்தைப் பேணிக் கொண்டே நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டியிருக்கின்றது – கல்வி பணிப்பாளர் கே. பாஸ்கரன்

0
417

பாரம்பரியத்தைப் பேணும் அதே வேளையிலே நாங்கள் கல்வியிலும் நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டி இருக்கின்றது. இது மிகவும் சவாலான விடயம். ஏனெனில் தற்போதுள்ள மாணவ சமுதாயம் எல்லாவற்றிலும் ஆட்கொண்டு ஆசிரியர்களை மிஞ்சிப் போகின்ற அளவிற்கு இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.

மட். ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் இன்று (07) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேச கலாச்சார விழுமியங்களை மறந்து நாங்கள் ஒரு பிழையான கலாச்சாரத்திற்குள் உட்பட்டுச் செல்வது கவலைக்குரிய விடயம், எமது கலாச்சார பாரம்பரியங்கள் பாடசாலை மாணவர்களிடையே வளர்க்கப்பட வேண்டும் என்பற்காக ஜனாதிபதி அவர்கள் பேண்தகு அபிவிருத்தி என்பதன் மூலம் எமது கலாச்சாரம், சுற்றாடல், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற 05 விடயங்கள் உள்ளடக்கப்பட்ட ஒரு செயற்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எமது கலாச்சாரத்தோடு இருந்திருந்தால் தற்போது ஏற்படுகின்ற தொற்றா நோய்கள் எமக்கு வந்திருக்காது. இதனை தற்போது பாடசாலைகளின் உணவுப் பழக்கவழக்கத்தினூடாக முன்னெடுக்கின்றார்கள். இதில் பெற்றோர்களும் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எனவே நாம் எமது பாரம்பரிய விடயங்களை பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை முன்னெடுக்கும் போது அதனூடாக எது கலாச்சாரத்தைக் காக்க முடியும்.
இன்று கல்வியில் பல புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதியின் மூலம் டிஜிட்டல் ஸ்ரீலங்கா எனும் செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்படடுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி கணனிமயப்படுத்தப்படும். அடுத்த வருடங்களில் உயர்தர மாணவர்களுக்கு ரப் வழங்கும் செயற்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது ஆசிரியர்களுக்கும் அவை கொடுக்கப்படவுள்ளது.
இதனை நாங்கள் எவ்வாறு கையாள்வது, இதற்கு நாங்கள் எவ்வாறு முகங்கொடுப்பது. ஒருபுறம் கலாச்சாரத்தைப் பேணவும் வேண்டும் அத்துடன் நவீனத்துவத்துடன் செல்ல வேண்டும். இவ்விரு விடயங்களிலும் மிகவும் ஆணித்தரமாக இருக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது.
மாணவர்களுக்கு டப் வழங்கப்படும் போது பல சமுகவலை தளங்கள் தடை செய்யப்பட்டே கொடுக்கப்படும். இருப்பினும் மாணவர்களை விட ஆசிரியர் இதனைக் கையாழ்வதற்கு முன்வர வேண்டும் இதற்காக நாங்கள் ஆயத்தப்பட வேண்டும். கணனி வளத்தைப் பயன்படுத்தி கல்வியைக் கற்க ஆசரியர்கள் அந்த அறிவைப் பெறாவிட்டால் இதனைச் சாத்தியப்படுத்த முடியாது.
எனவே ஆசிரியர் தற்போதுள்ள நவீன முறையில் கற்பித்தலை மேற்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். தற்போதுள்ள முறைமையில் நாங்கள் கற்பித்தலைத் தொடர்ந்தால் நாங்கள் சமுகத்தை முன்னேற்ற முடியாத நிலை ஏற்படும். அதற்கேற்றவாறு நவீன முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தலை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
பாரம்பரியத்தைப் பேணும் அதே வேளையிலே நாங்கள் கல்வியிலும் நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டி இருக்கின்றது. இது மிகவும் சவாலான விடயம். ஏனெனில் தற்போதுள்ள மாணவ சமுதாயம் எல்லாவற்றிலும் ஆட்கொண்டு ஆசிரியர்களை மிஞ்சிப் போகின்ற அளவிற்கு இருக்கின்றார்கள். அதனை நாங்கள கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான விடயம் இருப்பினும் அதனைக் கையாள வேண்டிய பொறுப்பு கல்விச் சமுகத்தினருக்கும், பெற்றோருக்கும் இருக்கின்றது.
இதனை நாங்கள ஒரு வழிக்குக் கொண்டு வருவதாக இருந்தால் ஆண்மீகம் ஒன்றே சிறந்த வழி. ஆண்மீகத்தினூடக கலாச்சாரத்தோடு நாங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்கா விட்டால் அவர்களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது.
தற்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் தற்போது காப்புறுதிச் சேவையொன்றினை முன்வைத்திருக்கின்றது. இன்றைய தினம் அத் திட்டம் இலங்கை முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. எமது நாட்டில் கல்வி என்பது இலவசமாக வழங்கப்படுகின்றது. இலவச நூல், இலவச சீருடை, அதே போன்று கஷ்ட பிரதேச படசாலைகளுக்கு இலவச பாதணி, தற்போது இலவச காப்புறுதி. எமக்கான வளங்கள் அரசாங்கத்தால் அதிகம் வழங்கப்படுகின்றது. இதுவும் மாணவர்களின் சுகாதாரத்தை அடிப்படையாகக் கெண்டே வழங்கப்படுகின்றது.
எனவே எமது உணவுப் பழக்கவழக்கம், சுகாதாரப் பழக்கவழக்கம் என்பவற்றை பண்பாடு பாரம்பரியத்தை பேணுவதனூடாகத்தான் காப்பாற்ற முடியும் என்பது அடிப்படையான ஒன்றாக விளங்குகின்றது என்று தெரிவித்தார்.