த. தே. கூட்டமைப்பு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்- முன்னாள் . பா . உ. சந்திரநேரு

0
338

கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக அன்றி மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றக் கூடிய கல்வி அறிவுடையவர்களை எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தல்   தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலங்களை விட எதிர்வருகின்ற உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் மக்களுக்கு சுதந்திரமானதும், ஜனநாயக நீரோட்டத்திலமைந்ததுமான ஒரு தேர்தலாக அமையப் போகின்றது.

இத்தேர்தலின் மூலம் தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பு, தற்போதுள்ள அரசியல் செயற்பாட்டு நடவடிக்கை, பிரதேச மற்றும் தேசிய அரசியல் பிரதிநிதிகளின் செல்வாக்கு என்பனவற்றை அளவீடு செய்யக்கூடியனவாக இது அமையப் போகின்றது.

எனவேதான் எதிர்வருகின்ற தேர்தலில் தமிழ் சமூகம் தமக்கான குரலாகவும், சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்களாகவும் செயற்படக் கூடிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அந்தந்த பிரதேச மக்கள் அல்லது கிராமமட்டத்திலான அமைப்புக்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வேட்பாளர்களை தெரிவு செய்யக் கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

கொள்கைக்காகவும், தமிழினத்தின் இலக்கினை அடைந்து கொள்வதற்காகவும் வாக்களித்து வந்த அம்பாறை மாவட்ட மக்கள் இன்று பணத்திற்காகவும், அற்பசொற்ப இலாபங்களுக்காகவும் சோரம்போகக் கூடியவர்களாக மாற்றப்பட்டவரும் செயலானது ஜனநாயகத்திற்கு விழுந்துள்ள பேரடியாக அமையும்.

மக்கள் தமக்கு கிடைக்கின்ற வாக்கின் பலத்தை அறிந்து கொள்ளாமல் பணத்திற்கும், சுயலாபங்களுக்குமாக ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கொந்தராத்துக்காரர்களையும், கடைமுதலாளிமார் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர்களை தெரிவு செய்யும் அபாயகரமான சூழல் இன்று தோன்றியுள்ளமை பெரும் சாபக்கேடாகும்.

இன்றைய அரசியலில் சிலர் தமக்கு விலாசம் தேடுவதற்கும், தாம் செய்து வரும் தொழிலை பெரிதாக்குவதற்கும் அரசியலை நாடுகின்றனர். இவ்வாறானவர்கள் அரசியலுக்கு வந்து சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சியைக் கொண்டு வந்த தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்த்து வைக்கப்படாத நிலையில் ஆட்சி முடிவடையும் காலம் நெருங்கி வருகின்றது.

அம்hபறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் இந்த நல்லாட்சி மூலம் தீர்த்து வைக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தாலும், அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களினதும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் அடிப்படை வசதிகள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலைலுள்ளது. அவர்களுக்கான வாழ்வாதார உதவி, கல்வி, சுகாதார வசதிகள் எதனையும் இந்த அரசாங்கத்திடமிருந்து எவரும் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.

இதேவேளை படித்த பல்லாயிரக் கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி வீதிகளில் தொடர்ந்தும் போராட்டங்களை செய்து வருகின்ற அவலமும் தொடர்கின்றது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமெதனையும் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்துவருவதும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளன.