இரவுவேளையில் மாடு கொண்டு சென்ற வாகனம் கொக்கட்டிச்சோலை இளைஞர்களினால் மடக்கிபிடிப்பு

0
1345

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டுசென்ற வாகனத்தினை கொக்கட்டிச்சோலை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைப்படைத்த சம்பவம் இன்று(06) புதன்கிழமை இரவு 7.45மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த வாகனத்திலிருந்து ஏழு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவ்வாகனத்தினை செலுத்திசென்ற சாரதியும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் இரவுவேளையில் மணற்பிட்டி பகுதியிலிருந்து வாகனமொன்று வருவதனை அவதானித்த கொக்கட்டிச்சோலைப் பகுதி இளைஞர்கள், அவ்வாகனத்தினை நிறுத்தி அவதானித்தபோது, குறித்த வாகனத்திற்குள் ஏழு மாடுகள் இருப்பதனை பார்த்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிமக்கள் அவ்விடத்தில் கூடியமையினால் பதற்ற நிலையும் ஏற்பட்டது. அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் அவ்வாகனத்தினையும், சந்தேகநபரினையும் பொலிஸ் நிலைத்திற்கு கொண்டுசெல்ல முற்பட்ட போது, உரிய நபர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டனர். இதற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்பட்டன.
இங்கு கூடிய மக்கள் கருத்து கூறிய போது, தமது பிரதேசத்தில், இரவுவேளையில் மாடுகள் எவ்வித அனுமதியும்இன்றி இரவுவேளையில் கொண்டு செல்கின்ற சம்பவம் அதிகளவில் இடம்பெறுவதாகவும், அதேபோன்று மாடுகள் பலவும் களவாடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். தமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்ற நிலை தொடருமாகவிருந்தால் தமது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.