பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு கடன் சலுகை

0
363

பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு கடன் சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இதனை குறிப்பிட்டார்.
அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளியின் காரணமாக அரசாங்க பல்கலைகழகங்களில் இணைந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் அரசுசாராத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
இதன் கீழ் ஆகக்கூடிய கடன் தொகையாக 800,000 ரூபா வழங்கப்படவுள்ளது. வட்டியற்ற கடன்வசதி திட்டமொன்று 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுயிருந்தது. அரசாங்கம் இதனை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதற்கமைவாக அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு பொதுவான செலவுகளின் அடிப்படையில் 1.1 மில்லியன் ரூபா வரையில் கடன் தொகையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏனைய கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கும் ஏனைய செலவுகளுக்காக வருடத்திற்கு 75,000 ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகை கடன் தொகையினை மூன்று வருட பட்டப்படிப்பிற்காக 1,025,000 ரூபா வரையிலும், நான்கு வருட பட்டப்படிப்பிற்காக 1,100,000 ரூபா வரையும் அதிகரிக்கப்படவுள்ளது.

 

இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.