வாகரையில் மக்களது குறைகளைக் கேற்கும் குறைகேள் மன்ற நிகழ்வு

0
472

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்தின் பங்களிப்புடன், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் குறைகேள் மன்ற நிகழ்வு இடம்பெற்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இருந்து பி.பகல் 2.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் 21 துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு பதிலளித்ததுடன் தமது கடமைகளையும் தெளிவுபடுத்தினர். இதில் 135பேர்வரை கலந்துகொண்டனர்.

வாகரை பிரதேசத்தில் 3500இற்கும் மேற்பட்ட காணி அவணங்கள் காணி கச்சேரி உட்பட்ட சகல நடவடிக்கைகளும் இடம்பெற்ற போதும் மாகாண காணித் திணைக்களத்தில் இருந்து காணி ஆவணங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது கமநல சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வேளாண்மைக் காணி இடாப்பு பதிவு உட்பட பல விடயங்களில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால் பல பிரச்சனைகளுக்கு தாம் முகம் கொடுப்பதாக கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் நீண்டகாலமாக விளையாட்டு உத்தியோகத்தர்கள் இன்மையால் பிரதேச விளையாட்டு போட்டிகள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்

நுண்கடன் காரணமாகவும் முறையற்ற வெளிநாடு செல்லலாலும் பெண்கள் , குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இயங்காமையினால் மது பாவனை அதிகரிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு காணப்படுகின்றது.

பிரதேசத்தில் அதிகளவிலான ஆசிரியப் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்பு, இடைவிலகும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு என பலவகையான பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். கோரளைப்பற்று வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஏ.அமலனி, தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அகத்தின் மாகாண இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் விளக்கவுரையாற்ற தலைமையுரையை உதவி பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்.

இவ்வாறான நிகழ்வு தொடர்ந்தும் இடம்பெற அகம் உதவவேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதுடன், அரச அதிகாரிகளுக்கிடையிலும் பொது மக்களுக்கிடையிலும் சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்த இந்நிகழ்வு உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார்.