மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்பாட்டு விழுமியங்கள் மட்டக்களப்பில் அமைக்கப்படும் நூலகத்தில் தெரியவேண்டும்.

0
389

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்பாட்டு விழுமியங்கள் மட்டக்களப்பில் அமைக்கப்படும் நூலகத்தில் தெரியவேண்டும். என்பது ஆளுனரின் நோக்காக இருக்கின்றது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(06) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
வித்தியாலயத்தின் அதிபர் சி.அகிலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
செயலாளர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ஆர்வத்துடன் செயற்படுகின்றார். மாவட்டத்திலே அமைக்கப்படும் பொதுநூலகத்தினை மாவட்டத்தின் பண்பாட்டு விழுமியங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்க வேண்டுமென்பதற்காக அதற்கான நிதிவளத்தினையும் தேடிக்கொண்டிருக்கின்றார். என்றார்.
இதன்போது, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியெய்து, பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பாடசாலையில் பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் சான்றிதழ், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.