2025இல் இலங்கையில் எய்ட்ஸ் இருக்காது: விபச்சாரமற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!

0
496
உலகில் 2030இல் எய்ட்ஸ் நோய் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் 2025இல் எய்ட்ஸ் முடிவுக்குக்கொண்டுவரப்படும். அதற்காக நாம் விபச்சாரமற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.
என்று இலங்கை சுகாதாரத்திணைக்களத்தின் எய்ட்ஸ் மற்றும் பாலியல்நோய்தடுப்புப்பிரிவின் சமுக மருத்துவநிபுணர் டாக்டர் சத்யா ஹேரத் தெரிவித்தார்.
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகம் நேற்று(4) திங்கட்கிழமை காரைதீவில் நடாத்திய பேரணி மற்றும் விழிப்புணர்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டுரையாற்றியபோதே டாக்டர் சத்யா மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வு  கல்முனை சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனையின் தொற்றாநோய் மற்றும் பாலியல்நோய் எய்ட்ஸ் பிரிவுக்குப்பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர். எ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை  சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் காரைதீவு சம்மாந்துறை நிந்தவூர் சாய்ந்தமருது பொதுச்சுகாதாரசேவைப்பணிப்பாளர்  பிரிவினர் மனிதஅபிவிருத்தித்தாபனம் காரைதீவு சிவில்சமுக நிறுவனங்களின் ஒன்றியம் மற்றும் பொதுஅமைப்புகள் ஒன்றிணைந்து பேரணியையும் கூட்டத்தையும் நடாத்தினர்.
முன்னதாக காரைதீவு விபுலானந்த சதுக்கத்திலிருந்து பானர்கள் சுலோக அட்டைகள் சகிதம் பேரணி யொன்று விபுலாநந்த மணிமண்டபம்வரை நடைபெற்றது.
விபுலானந்த மணிமண்டபத்தில் எய்ட்ஸ் தடுப்புமுறை பற்றி விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் பதில் பணிப்பாளர் டாக்டர் எ.இஸதீன் நிகழ்வை அங்குரார்ப்பணம்செய்துவைக்க டாக்டர் ஹாரீஸ் தலைமையுரை நிகழ்த்தினார்.
அங்கு டாக்டர் சத்யா மேலும் உரையாற்றுகையில்:
உலகில் 35மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 1597பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை 411பேர் மரணித்துள்ளனர்.
அம்பாறையில் இதுவரை 30 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தடுப்பதானால் அனைவரும் இணைந்தே தடுக்கவேண்டும். எனவேதான் இவ்வருடத்திற்கான சர்வதேச எய்டஸ்  தின தொனிப்பொருள் ‘அனைவரும் முக்கியம்’ என்பது.
வரலாறு:
உலகில் 1981இல் அமெரிக்காவில் இளைஞர்கள் பலர் மரணித்த சம்பவம் தொடர்பில் ஆய்வுசெய்தபோது எய்ட்ஸ்நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான காரணியை ஆய்வுசெய்தபோது 1983இல் பிரான்ஸில் எச்ஜவி. வைரஸ்தான் காரணமெனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முதல்படி எச்ஜவி. வைரஸ் தொற்று. அதிலிருந்து சுமார் 12வருடங்கள் தாண்டினால்தான் எய்ட்ஸ் வரும் எனவே அந்த 12 வருட காலப்பகுதியில் இதனை இனங்கண்டால் இந்தநோயை இலகுவாகக் குணமாக்கமுடியும். இதற்கு மருந்துண்டு.
ஆனால் வெட்கப்பட்டு அல்லது பயந்து இதனை இந்த 12வருடங்களுள் கண்டுபிடிக்காவிட்டால் மரணம் சம்பவிப்பதை தடுக்கமுடியாது.
உலகில் 3கோடி 75லட்சம்பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2016இல் மட்டும் 1கோடி 80லட்சம்பேர் தொற்றுதலுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் முதல் காலாண்டில் 40பேரும் இரண்டாவது காலாண்டில் 47பேரும் 3வது காலாண்டில் 53பேரும் தொற்றுதலுக்குளளாகியுள்ளனர்.
எவ்வாறு குணமாக்கலாம்? 
இதனை இலகுவாகக்கண்டுபிடிக்கமுடியும்.
குருதிப்பரிசோதனை மூலம் கண்டுபிடித்தால் ஆரம்பத்திலேயே இதனை இலகுவாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியும்.
இதற்கென இலங்கையில் 30 நிலையங்கள் உள்ளன. கல்முனையில் அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் இந்த நிலையமுள்ளது.
சந்தேகமானவர்கள் போய் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவுகொள்ளல் தொற்றுள்ள தாயிலிருந்து பரவுதல் ஊசிமூலம் பரவுதல் ஆகிய இதுபரவுகின்ற வழிமுறைகளாகும்.
எனவே நாம் இலகுவாக இந்த வைரஸை தடுக்கமுடியும்.
பெரும்பாலும் விபச்சாரம் மூலமே இது பரவுகிறது. எனவே விபச்சாரமற்ற சமுதாயத்தை உருவாக்கினால் எய்ட்ஸ் அற்ற சமுதாயம் உருவாகும். அப்போது எய்ட்ஸ்அற்ற உலகமுருவாகும். என்றார்.
காணொளி மூலம் தமிழில் இவ்விளக்கவுரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பதில் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸதீன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர்.தஸ்லிமா(நிந்தவூர்) டாக்டர் றிஸ்னீன்முத்(காரைதீவு) டாக்டர் அஜூவத்(சாய்ந்தமருது) டாக்டர் சமீர்(சம்மாந்துறை) மாவட்ட வைத்தியஅதிகாரிகளாக டாக்டர் சஹிலாராணி(நிந்தவூர்) டாக்டர் றிஸ்பின் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் பொதுச்சுகாதாரபரிசோதகர்களின் தலைமைப்பொறுப்பதிகாரி பி.பேரம்பலம்  தஸ்தகீர் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.