வறுமையைக் குறைத்து தேசிய மட்டத்திலும் பங்களிப்பவர்களாக நீங்கள் மாற வேண்டும்

0
293

அரசாங்கத்தால் செயற்படுத்துகிற திட்டங்களுடன் இணைந்து கொண்டு பங்களிப்பினையும் வழங்கி உங்களுடைய குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்வதுடன், பிரதேச, மாவட்டத்தின் வறுமையைக் குறைத்து தேசிய மட்டத்திலும் பங்களிப்பு வழங்குபவர்களாக நீங்கள் மாற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் 102 பயனாளிகளுக்கு 4.8 மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,

அரசாங்கத்தால் செயற்படுத்துகிற இவ்வாறான திட்டங்களுடன் இணைந்து கொண்டு பங்களிப்பினையும் வழங்கி உங்களுடைய குடும்ப வருமானத்தை அதிகரித்து, இதன் மூலம் உங்களது பிரதேசத்தின் வறுமையைக் குறைத்து, மாவட்டத்தின் பொருளாதாரத்திற்குப் பங்களித்து வறுமையை ஒழித்து, தேசிய மட்டத்திற்கும் பங்களிப்புச் செய்வதற்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
கடந்த காலங்களை விடவும் இந்த வருடத்தில் வறுமை சற்றுக் குறைந்திருக்கிறது. 11.3 வீதமாக தற்போதைய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் இதுவரையில் நாங்கள் பல்வேறு நிதி மூலங்களின் மூலம் வாழ்வாதார உதவித்திட்டங்கள் மூலம் வங்கிய போதும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் மூலம் 95 மில்லியன் ரூபாவை இவ்வாறான வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. இது தவிர தேசிய ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக 100 மில்லின் ரூபா பெறுமதியான நிதியின் மூலம் வாழ்வாதர உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
எனவே 200 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்கள் வாழ்வாதார வேலைத்திட்டங்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே இத்திட்டங்;களின் ஊடாக இப் பிரதேசத்தினுடைய வறுமையை தணித்து மக்களுடைய வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எங்களுடைய களநிலை உத்தியேயாகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பட்டிப்பளையிலுள்ள மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ். முரளிதரன், மண்முனை தென் மேற்கு பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.குணரெட்ணம், கே.பிரபாகரன், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களது அமைச்சின் ஊடாக இவ்வருடத்தில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், வீதிப்புனரமைப்பு, மற்றும் குளங்களின் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் பார்வையிட்டனர்.