ஓட்டமாவடியில் வாகன விபத்தில் பெண் பலி

0
483

(வாகரை நிருபர்)  மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமாக தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி கணவருடன் துவிச்கச்சர வண்டியில் சென்று கொண்டிருந்த போது காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு செல்வதற்கு உமி ஏற்றி வந்த லொறி பின்னால் வந்து மோதியதில் இவ்விபத்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.