கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் யாவும்,வெளிப்படையான முறையிலே மேற்கொள்ளப்பட்டது

0
588

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் 1,119 பேருக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில், திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றது.

தமிழ் மொழி மூலமாக 937 நியமனங்களும் சிங்கள மொழி மூலமாக 168 நியமனங்களும், ஆங்கில மொழி மூலமாக 14 நியமனங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

“தற்போதைய அரசாங்கம், பட்டதாரிகள் தொடர்பில் கூடிய கரிசனை காட்டுகின்றது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கங்களுள் ஒன்றாக உள்ளது” என்றார்.

“கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரவை, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு கூடிய கரிசனைகொண்டு செயற்பட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டமையால், அவர்கள் செய்த அந்தப் பணியை, ஆளுநர் என்ற அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதனடிப்படையிலே, இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இந்நியமனங்கள் யாவும், வெளிப்படையான முறையிலே மேற்கொள்ளப்பட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்நியமனங்களை வழங்குவதற்காக, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, சுயாதீனமாகச் செயற்பட்டது. அங்கு எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை. எதிர்காலத்தில், இன்னும் பல பட்டதாரிகளை இணைக்கவுள்ளோம். கிழக்கு மாகாணத்தை, கல்வித்துறையில் ஒரு படிநிலையாவது முன்னிலை பெற்ற மாகாணமாக மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்” என, ஆளுநர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப், இம்ரான் மகரூப், எம்.ஏ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சீ.தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, எ.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை, நஜீப் அப்துல் மஜீத் ,ஜே.எம்.லாஹீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்