கொக்கட்டிச்சோலையில் பலரின் கவனத்தினை ஈர்ந்த மாணவர் பாராளுமன்ற அமர்வு

0
1071

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் அண்மையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு, வரலாற்றில் முதன்முறையாகவும், இப்பாடசாலையின் வரலாற்றின் முதன்முறையாகவும் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவர் பாராளுமன்ற அமர்வு குறித்தான விடயத்தினை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
நாட்டிலே நடைபெறுகின்ற பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றமை மிக அரிதான ஒன்றே. ஆனாலும் ஊடகங்களின் வாயிலாக பார்;ப்பதற்கு பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஆனால் முழுமையாக அதனை பார்வையிடுவதில்லை.  பாராளுமன்றம் தொடர்பிலும், தேர்தல்கள் குறித்தும் மாணவர்கள் ஆர்வம் செலுத்துவதும் மிகக்குறைவே. இவ்வாறான நிலையில்தான் பாடசாலைகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, அதன் மூலமாக மாணவர் பாராளுமன்றத்திற்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலே அனேகமான பாடசாலைகளில் இன்னும் பாராளுமன்ற அமர்வுகள் நடாத்தப்படாத நிலையில், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில், வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சண்முகநாதனின் ஒழுங்கமைப்பில் மாணவர் பாராளுமன்ற அமர்வு அண்மையில் நடைபெற்றது.
இலங்கை நாட்டிலே உள்ள பாராளுமன்றம் போன்று, கட்டடங்களை அமைக்காவிட்டாலும், அதற்கேற்ற வகையில் தளபாடங்கள் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் போடப்பட்டிருந்தன. சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகங்கள், சபை முதல்வர், பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதற்கேற்ற வகையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்கள் கதைப்பதற்கேற்ற வகையில் ஒலிவாங்கிகளும் அவர்களது மேசைகளிலே வைக்கப்பட்டிருந்தன.
அமர்வு நடைபெறுவதற்கு முன்பு மாணவர் பாராளுமன்ற அமர்விற்காக சபைக்கு  மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர். அதன் பின்னர் பிரதி அமைச்சர்களும், அமைச்சர்களும், செயலாளர் நாயகங்களும் வருகைதந்து தமக்கான ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். இதன் பின்னர் செங்கோலை தொடர்ந்து சபாநாயகரும் சபைக்கு வருகைதந்தார். சபைநாயகர் சபைக்கு வருவதினை அவதானித்து சபையில் இருந்த அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக இதனைப் பார்வையிடுவதற்காக வருகைதந்திருந்த வலயக்கல்விப் பணிப்பாளர், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று சபாநாயகருக்கு மரியாதையினை வழங்கி இருந்தனர். இச்செயற்பாடு உண்மையான பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றதென்பதை போன்று பிரதிபலித்தது.
சபாநாயகர் சபைக்கு வருகைதந்து செங்கோலும் உரிய இடத்தில் வைக்கப்பட்டதனை தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று உறுதியுரையை எடுத்துக்கொண்டனர். இதன் பின்னர் சபாநாயகரின் அறிவித்தலை தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற திட்ட பிரேரணைகளை முன்வைத்தனர். இத்திட்டங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளிவந்தன. இதனால் அனைத்து அமைச்சர்களும் முன்வைத்த பிரரேரணைகளுக்கு சபாநாயகரினால் அனுமதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செயலாளர் நாயகமும், பிரதமரும் முன்மொழிவுகளில் கையொப்பமும் இட்டனர். பிரரேரணைகள் முன்வைக்கப்படும் போதும், சபை அமர்வு நடைபெற்று முடியும் வரையும் சபையிலிருந்து எவ்விதமான சத்தங்களும் சபையில் கேட்வில்லை. இதன்மூலம் சபை சிறந்த ஒழுக்கத்தினை பேணியதென்பதை காணமுடிந்தது. மேலும் அமைச்சர்களின் திட்டங்களுக்கு எதிர்கருத்துக்கள் ஒன்றுமே சபையின் உறுப்பினர்களினால் முன்வைக்காமை, சிறந்த திட்டமுன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதனை உணரமுடிகின்றது.
சிறந்த ஒழுக்கப்பண்புடன் நடந்து கொண்ட சபையின் அங்கத்தவர்களின் பேச்சுத்திறன் வந்திருந்த எல்லோரையும் கவர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சபையில் பேசிய அனைத்து மாணவர்களும் எவ்வித சொல் தடுமாற்றம் இன்றியும், மிகவும் சத்தத்துடனும் பேசினர். இப்பேச்சினை மீண்டும் கேட்க வேண்டுமென்ற  ஆவல் அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பட்டிருந்தமையினை அவர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து புலப்பட்டது. அதேவேளை சபைக்கு சமூகமளித்திருந்த அனைத்து அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கோட்சேட் அணிந்திருந்ததுடன், ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளை ஆடை அணிந்திருந்தமையினையும் காணமுடிந்தது. சபையின் அடுத்த அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக அறிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சபை கலைக்கப்பட்டது. சபை கலைக்கப்பட்டதன் பின்பும் சபாநாயகர் செங்கோலைத் தொடர்ந்து செல்ல, அவரைத் தொடர்ந்து செயலாளர் நாயகங்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே சென்றனர்.
பாடசாலையிலே பல வேலைப்பழுக்கள் இருக்கின்ற நிலையிலும், மாணவர் பாராளுமன்றத்தினை நடாத்துவதற்காக பல்வேறான வேலைகளில் அதிபரும், ஆசிரியர்களும், மாணவர்களும், சமூகத்தினரும் செயற்பட்டிருந்தமையினையும் ஒழுங்கமைப்பின் மூலமாக காணமுடிந்தது. பாடசாலையில் ஒலி வசதிகள் இல்லாத நிலையிலும், சமூகத்தினதும், அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் ஒலி வசதி செய்யப்பட்டிருந்தது. அதேவேளை சபைக்கான செங்கோலும் மரத்தினால் உண்மையான செங்கோலுக்கு ஒத்ததாக அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களை ஒழுங்குப்படுத்தியதுடன், சிறப்பாகவும் ஆசிரியர்கள் வழிநடந்திருந்தனர் என்பதனை நடைபெற்ற அமர்வு வெளிக்காட்டியது. அதேபோன்று இவற்றினையெல்லாம் தலைமையேற்று சிறப்பாக வழிநடாத்திய பெருமை அதிபரையும் சாரும். எனவேபலரின் பங்களிப்புடன் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றிருந்தமை எல்லோரையும் கவர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ச்சியாகவும், முன்மொழியப்பட்ட விடயங்களை பாடசாலையில் நடைமுறைப்படுத்தி, அமர்வுகள் நடைபெறவேண்டுமென்பதும் அங்கு வருகைதந்திருந்த அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.