மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மேலதிக அரசாங்க அதிபர் இருவரும் கடமையை பொறுப்பேற்பு

0
549

நீண்ட இழுபறிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று (23) காலை 9.15 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட புதிய அரசாங்க அதிபர், தாண்டவன்வெளி வியாகுலமாதா தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அதனையடுத்து, மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்த அவர், மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலயத்திலும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, உத்தியோகத்தர்களின் வரவேற்பை அடுத்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வந்த திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சாள்ஸ், பதவி உயர்வு பெற்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த 2 மாதங்களாக நியமனம் வழங்கப்படாதிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் அமைச்சரவையின் அங்கிகாரத்தையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால் மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக திருமதி சுதர்சினி சிறீகாந், தனது கடமைகளை இன்று (23) பொறுப்பேற்றார்.

காரைதீவு பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.