தண்ணீர் பிரச்சினைக்காக எமது நாட்டிலும் யுத்தம் வெடிக்கும்

0
342

தண்ணீர் பிரச்சினைக்காக எமது நாட்டிலும் யுத்தம் வெடிக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்தார்.

நீர்ப்பாசன, கமத்தொழில், மகாவலி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீர் பிரச்சினையால் உலகில் பல யுத்தங்கள் நடந்துள்ளன. ஜோர்தான் கங்கை தொடர்பில் இஸ்ரேலுக்கும் சிரியாவுக்குமிடையில் யுத்தம் ஏற்பட்டது. நைல் நதி தொடர்பில் எகிப்தில் பிரச்சினை ஏற்பட்டது. சீனாவில் மஞ்சள் ஆறு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. தாய்லாந்தின் ஒருபகுதியில் பிரச்சினை உருவானது.

மொனராகலையில் உள்ள ஆறுகளினூடாக தான் ஹம்பாந்தோட்டைக்கு நீர் கிடைக்கிறது. சில இடங்களில் பலாத்காரமாக அணைகள் கட்டப்பட்டு நீரை தடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆட்சியில் நாம் நட்டிய அடிக்கல்கள் அகற்றப்படுகின்றன. இது தவறாகும். தற்போதைய ஜனாதிபதியும் விவசாய அமைச்சராக இருந்தார்.எனவே விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதன் போது குறுக்கீடு செய்த அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா, நானும் கடந்த அரசில் அமைச்சராக இருந்தேன். அடிக்கல்கள் அகற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. யாராவது தடுப்பு இட்டு நீர் ஓடுவதை நிறுத்தினால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.