முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை

0
843

(படுவான் பாலகன்)  முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

கலாசார திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று(21) செவ்வாய்க்கிழமை அழகிய குடும்பம் எனும் தலைப்பில் செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்து நடாத்தினர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

குடும்ப உளவியல், குடும்ப முகாமைத்துவம் எனும் தலைப்புக்களில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் வி.குகதாஸன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜனாபா மஹ்பூப் நிசா ஆகியோர் இதன்போது விரிவுரைகளை வழங்கினர்.

இந்;நிகழ்வில் பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முப்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த குடும்பங்கள் அனைத்தும் அழகிய குடும்பங்களாகவே இருந்தன. ஆனால் தற்போது, அழகிய குடும்பங்கள் என்று சொல்வதற்கு எந்த குடும்பகளுமே இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் உணவிற்காக போராடினார்கள், வீடுகள் ஒழுங்காக இருக்கவில்லை ஆனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருந்தது. ஆனால் தற்போது, வீடுகள் மாளிகைகளாக கட்டப்படுகின்றன. அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அந்நிலையிலும் கூட அழகிய குடும்பங்களை காணமுடியாதுள்ளது. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேசுவதில்லை, சகோதரங்களுடன் பேசுவதில்லை. எல்லோரும் ஒருமித்திருந்து உணவு உண்பதில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு அழகிய குடும்பங்களை உருவாக்க முடியும். தற்காலத்தில் ஆடம்பரங்களுக்காக பல தொகை பணங்களை செலவு செய்து வருகின்றோம். இதனால் எமக்கு ஏற்படக்கூடியது தீங்கேயாகும். இதைவிடுத்து தங்களது குடும்பங்களுக்காக நேரங்களை ஒதுக்குங்கள் பிள்ளைகளுடன் கதைபேசி மகிழுங்கள். இதன் மூலமாக அழகிய குடும்பங்களை உருவாக்க முடியும் என்றார்.

குறித்த செயலமர்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.