பிரபாகரன் உருவாகியிருக்காவிட்டால் நான் பீல்ட் மார்ஷலாக உருவாகியிருக்க மாட்டேன்

0
776
பிரபாகரன் உருவாகியிருக்காவிட்டால் நான் பீல்ட் மார்ஷலாக உருவாகியிருக்க மாட்டேன். பிரகாகரனிடம் இருந்தே யுத்தத்தைக் கற்றுக்கொண்டோம். யுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்கவேண்டும்.  வடக்கு, கிழக்கு,  தெற்கு என எங்கும் இராணுவம் இருக்க வேண்டும்.”
– இவ்வாறு பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
‘இராணுவத்தினர் குற்றமிழைக்கவில்லை எனக் கூறுபவர் இராணுவத் தளபதியாகப்  பதவி வகிக்கத் தகுதியற்றவர். முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருந்தால் நெருக்கடியில் இருந்து எம்மால் ஒருபோதும் மீண்டெழ முடியாது” என்றும் பொன்சேனா கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, நீதி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘யுத்தம் ஆரம்பமாகும்போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். ஆனால், தற்போது போன்று அன்று பலமான இராணுவம் இருந்திருந்தால் இரண்டு வருடங்களில் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருப்போம். யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும். இராணுவத்தைப் பலவீனப்படுத்தினால் அது நாட்டுக்கு ஆபத்தாகவே அமையும்.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எமக்கு செல்ல முடியாதுள்ளது. ஆனால், அமெரிக்க இராணுவத் தளபதி இலங்கைக்கு வருகின்றார். இதனை இப்படியே விட்டுவிட முடியாது.  இராணுவம் தப்புச் செய்யவில்லை என்று கூறுபவர் இராணுவத் தளபதியாக இருப்பதற்குத்  தகுதியற்றவராவார். இராணுவத் தளபதி குற்றம் செய்திருந்தாலும் அது பற்றி விசாரிக்கப்படவேண்டும். அதனை விடுத்து முட்டாள்தனமாகப் பேசி கொண்டிருப்பதால் எம்மால் நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது” – என்றார்.