வரலாற்றில் முதன்முறையாக வெட்டவெளியில் கொட்டும் வெயிலில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

0
657

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று(19) ஞாயிற்றுக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அதிகஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 24வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், முதன்முறையாக இன்றைய தினமே பாடசாலை வரலாற்றில் சாதனையாளர் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
ஆசிரியர் தட்டுப்பாடுகளுடன் காணப்படும் இப்பாடசாலையில், நிகழ்வுகள் நடாத்துவதற்கான மண்டபங்கள் இல்லாத நிலையிலும் பாடசாலையின் வெளிப்பகுதியில் தற்காலிகமாக வெயிலை மறைப்பதற்காக கூடாரம் அமைக்கப்பட்டு சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் சித்தியடைந்தவர்கள், வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்றவர்கள், பாடசாலைக்கு அதிகூடிய நாட்கள் வருகை தந்தவர்கள், விளையாட்டுப்போட்டி, தமிழ்தினப்போட்டி, ஆங்கில தினப்போட்டி, சமூகவிஞ்ஞானப் போட்டி ஆகியவற்றில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள் சாதனையாளர்களாக பரிசில்வழங்கி பாராட்டப்பட்டனர்.
இதன்போது, சாதனையாளர்களின் பெயர்களும், பாடசாலைகளின் குறைகளும் அடங்கிய “உலை நிலா” என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இதன் முதற் பிரதியை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், வித்தியாலய அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.