கப்பல்துறை மக்களின் துயரம்

0
701

திருகோணமலை நகரில் இருந்து சுமார் 13 கிலோமிற்றர் தூரத்தில் கண்டி திருகோணமலை நெடும்சாலை அருகில் கப்பல்துறை,மற்றும் விளாங்குளம் என்ற தமிழ் கிராமங்கள் உள்ளன.
இவற்றில் கப்பல்துறைக்கிராம மக்கள் கடந்த 1970களில் மலையகத்தில் நடந்த இனக்குளப்பங்கள் காரணமாக இடம்பெயர்ந்து திருகோணமலைக்கு வந்ததன் காரணமாக குடியேற்றப்பட்டதனால் உருவானது கப்பல்துறை என கிராம வரலாறு சொல்கிறது.
இந்நிலையில் இம்மக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்படுவதில் பல இடர்பாடுகளை இந்த மக்கள் சந்தித்த வந்துள்ளனர்.இது யுத்தகாலத்தில் அதில் ஈடுபட்ட இருபகுதியினரும் நடமாடிய பகுதியாகையால் இம்மக்கள் பெரும் இடர்பாடுகளை யுத்த காலத்தில் சந்தித்தனர்.
பின்னர் 1983,1985,1990 களில் காணப்பட்ட யுத்த மோதல்கள், அனர்த்தங்கள் காரணமாக பலமுறை உள்ளக இடம்பெயர்வைக்கண்ட இம்மக்களின் வாழ்வில் இவ்விடம்பெயர்வுகள்,யுத்த நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை எற்படுத்தியிருந்தன.பல உயிர்,உடமை இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. இவ்விடம்பெயர்வகளின்போது இவர்களில் பலர் வன்னியுள்ளிட்ட பல இடங்களுக்கும் திருகோணமலை கிளப்பன்பேக் முகாம்களிலும் சென்று அடைக்கலம் தேடி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் கடந்த 1994 இல் துறைமுகம்கள் கப்பல்துறை,மற்றும் புனர்வாழ்வுஅபிவிருத்தி அமைச்சராக விருந்த எம.;எச்.எம்.அஷ்ரப் அவர்களால் சில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மிழக்குடியமர்த்தப்பட்டனர்.
அதன்போது 18 முஸ்லீம் குடும்பங்கள்,மற்றும் சில சிங்களக்குடும்பங்கள் அடங்கலாக இணைத்து ஒரு மாதிரிகிராமமாகவே இக்குடியேற்றம் இடம்பெற்றன.
ஆனாலும் இவர்களுக்கான காணி உரிமைகள் முறையாக வழங்கப்பட வில்லை.குறிப்பாக லலித் அத்துலக் முதலி கப்பல்தறை அமைச்சராக இருந்தபோது இக்கிராமம் உள்ளிட்ட நகரின் பல கிராமங்களை இணைத்து சுமார் 5000எக்கரைவர்த்தமானி மூலம் துறைமுக அதிகாரசபைக்கான காணியாக பிரகடனப்படுத்தி விட்டார்.
ஆனால் கிராமங்களினுள் வாழும்; பல ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக வாழ்வதுடன் அதிகமானவர்களிடம் காணி ஆவணங்களும் இருந்தன. இது திரைமறைவில் நடந்த சம்பவம் எனவும் அரசியல்காரணங்களால் தமிழ் மக்களிடமிருந்து இக்காணிகளை பறிக்கும் முயற்சியாக நடந்தவை என்றும் பின்னர் அரசியல்வாதிகள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருகோணமலையின் 4ம்கட்டைப்பகுதியில் இருந்து கப்பல்துறை வரை சுமார் 7 கிலோமிற்றர் தூர இடைவெளியில் 1985இன்பிற்பகுதியில் அதிகளவிலான சிங்களக்குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் தற்போது பல்வேறு கட்டுமானங்களைச்செய்து அபிவிருத்தி கண்டு வருகின்றனர்.இதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை . சுமார் 10வருட காலத்திற்குள் கிண்ணியா,மற்றும் கந்தளாய்,தம்பலகமம்,பகுதிகளில் இருந்து அதிகளவிலான முஸ்லீம்மக்களும் கப்லதுறை பின்பகுதிகளில் குடியேறியுள்ளனர். என கிராம புள்ளிவிபரங்களில் காணமுடிகிறது
ஆனால் தற்சமயம் கப்பல்துறை தமிழ்மக்கள் சுமார் 300குடும்பங்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்நல்லாட்சிக்காலத்தில் பல கிராமங்களிலும் மக்கள் தமது நீண்டகால அபிவிருத்திபற்றி சிந்தித்து வரும் நிலையில், கப்பல்துறை தமிழ்மக்கள்மட்டும் ஒரு நிலையான கட்டிடம்,மற்றும் நிலையான பயிர் வசதிகளை செய்யமுடியாது தடுக்கப்பட்டு வரும்நிலையில் தவிக்கின்றனர்.இது ஏன் என இவர்கள் அங்கலாய்கின்றனர்.
கடந்த 11.11.2017இல் கப்பல்துறையில் உள்ள மங்களேஸ்வரி என்பவரது சேனைப்பயிற்செய்கை காணியில் இருந்து நிலையான பயிர்களான தென்னம்பிள்ளைகள் அங்கு வந்த நான்கு அரச அதிகாரிகளால் பிடுங்கியும் இடையால் உடைத்தும் வீசப்பட்டிருந்தன.
குறித்தகாணியில் கச்சான்,மற்றும் மரவள்ளி என பல பயிர்களையும் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த குடும்பம் பாடுபட்டு பயிர்செய்து வந்திருப்பதனைக்காணமுடிகின்றது.இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் காணியில் எவருமில்லாமையினால் யார்வந்ததுஎனபுரியாத மங்களேஸ்வரி குடும்பம் மறுநாள்சீனக்குடா பொலிஸ்நிலயம்சென்று முறையிட முனைந்துள்ளார்.
அங்கிருந்த பொலிசார் நீங்கள் துறைமுக அதிகார சபைக்காணியில் நீண்டகாலப்பயிரான தென்னையை நேற்று புதிதாக வைத்துள்ளதாக துறைமுக அதிகார சபையினர் இங்கு முறையிட்டுள்ளனர். அதன்பின்னரே அங்கு வந்து அவர்கள் தென்னை மரத்தை அகற்றியுள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பிவிட்டுள்ளனர்.
இதனால்வேதனையடைந்த குறித்த விவசாயி இவ்விடயத்தை கடிதமாக்கி, பிடுங்கி எறியப்பட்ட தென்னைப்பயிர்களின் படங்களுடன் அரசாங்க அதிபர்,பிரதேசசெயலாளர். ஆகியோருடம் கடிதம் மூலம் முறையிட்டதுடன் நாம் தற்காலத்தில் எந்தப்பயிரும் வைக்கவில்லை.இது முற்றிலும் பொய்யான சோடிப்பு என்பதனையும் விளக்கியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் ஜே.அருள்ராஜ், இக்காணி துறைமக அதிகாரசபையினரிடமிருந்து இன்னும் முறையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் நாம் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனிதாபிமானத்திற்கும் சட்டத்திற்கும் பொருந்தாத இந்த நடவடிக்கைக்கான பரிகாரம் கிடைக்காத நிலையில் விடயத்தை திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளுவில் மங்களேஸ்வரி முறையிட்டதுடன். “நாம் புதிதாக தென்னை வைக்கவில்லை. அது பல ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டவை, எமது முறைப்பாட்டை பொலிசார் எடுக்கவி;ல்லை”, என்பனவற்றையும் சுட்டிக்காட்டிய நிலையில் மனித உரிமைகள் அதிகாரிகள் சீனக்குடா பொலிசாரை அறிவுறுத்திய வகையில் பின்னர் பொலிசார் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர். இது ஒரு உதாரணம்தான் இதுபொன்ற பல விடயங்கள் அங்கு சோககதைகளாக வுள்ளன.
“இச்சம்பவம் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தின் பழிவாங்கும் நடவடிக்கை இது எனக்கு எதிராக மட்டும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை என பாதிக்கப்பட்ட மங்களேஸ்வரி தெரிவித்தார்”;.
இதேவேளை இவ்வாறு துறைமுக அதிகார சபைக்குள் எடுக்கப்பட்ட பொது மக்கள் வசிக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்படும் என தற்போதைய நல்லாட்சி கால ஆரம்பத்தில் திருகோணமலை கச்சேரிக்கு வருகைதந்திருந்த துறைமுகங்கள்; அபிவிருத்திக்குப்பொறுப்பாக விருந்த அமைச்சரான அர்ச்சுனா ரணதுங்க பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால் அது அறிவிப்பளவில் நிற்கிறதே தவிர இன்னும் விடுவிக்கப்பட்டதாக இல்லை.இந்நிலையில் அண்மையில் அபிவிருத்திக்குளுக்கூட்டத்தில் இதுவிடயமாக மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்ததனன் கேள்வி எழுப்பியபோது மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார இவ்வாறு பதிலளித்தார்.
“சிங்கப்பூர் குளுவொன்று திருகோணமலை நகர அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகளைச்செய்து வரு கிறது. அந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் குறித்த காணிகளில் அபிவிருத்திக்கு எடுக்கப்படாத காணிகள் மீழ மக்களுக்கு வழங்கப்படும்”; என உறுதி அளித்தார்.
இதேவேளை சிங்கள மக்களும் ஏன் முஸ்லீம்மக்களும் கூட இதே காணிகளில் பல கட்டிடங்கள் உள்ளிட்ட அபிவிருத்திகளைச்செய்யும் போது எதிலிகளாக ,ஏழைகளாக இருக்கும் தமிழ் மக்கள் மீது மட்டும் சட்டத்தையும், அநியாமான நடவடிக்கைளையும் பாவித்து அவர்களது அபிவிருத்தியை முடக்குவது ஏன்.? ஆதிகாரிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது எந்த அரசியல்வாதிகளை திருப்தி கொள்ளச்செய்வதற்கு.?
என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் மற்றய மக்களைப்போல் நாம் அடாத்தாகவா வந்து குடியேறினோம்.? அரசியல் காரணங்களுக்காக வா நாம் குடியேற்றப்பட்டோம்.? இல்லையே
“நாம்முறையாக அரசாங்கத்தினால்தானே குடியேற்றப்பட்டோம். நாம் தமிழர்கள் என்பததைத்தவிர என்ன குற்றம் செய்தோம். ஏன் எமக்கு மட்டும் இந்த நெருக்கடி. விருப்பமில்லை என்றால் எம் அனைவரையும் ஒரேயடியாய் வெளியேற்றுங்கள்”;
என கண்ணீருடன் தெரிவித்தனர். நல்லாட்சி என்று சொல்லப்படும் இக்கால கட்டத்திலும் அரச இயந்திரம் தொடர்ந்;து ; புறக்கணிக்கின்றது. நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.
ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் புறக்கணிக்கின்றனர். ஏன மக்கள் கவலை கொள்கின்றனர்.இவர்கள் மீழுவதற்கு வாழ்வாதாரத்தில் உயருவதற்கு இவர்களது அடிப்படையான காணி உரிமைப்பிரச்சனைகக்கு உடன் தீர்வு ஏற்படவேண்டும் இது எப்போது நடக்கும். ?
தொகுப்பு .பொன் சற்சிவானந்தம்.