27 ஆம் திகதி வேட்பு மனுக்கான அறிவித்தல்

0
389

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வேட்பு மனுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு  (17) கூடி ஆராய்ந்தது. இதன்போதே வேட்பு மனு கோரும் அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடுவதற்கான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாவதுடன் அதனைத் தொடர்ந்து வரும் 17 வது நாள் நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வருகிறது.

இதனடிப்படையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மூன்றரை நாட்களை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று தீர்மானித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் அதன் உறுப்பினர்களான முன்னாள் சட்ட வரைஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நளின் அபயசேகர மற்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.ஹூல் ஆகியோரே இவ்விடயங்கள் தொடர்பில் நேற்று கூடி ஆராய்ந்தனர்.

இதேவேளை இம்முறை வேட்பாளர் பட்டியலில் 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத விடத்து அப்பட்டியல் நிராகரிக்கப்படுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.