குதர்க்கம் பேசிக் கொண்டிருப்பது எமது சமுதாயத்திற்குரிய அனுகூலமான விடயம் அல்ல

0
459

எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் கொண்ட மக்கள் மத்தியிலே எங்களுடைய உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலகம் ஏதும் விளைவித்து விடாத வகையிலே அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டு பெற்று எடுக்கின்ற மிகப் பெரிய விடயங்கள் தென்னகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது வடக்கு கிழக்கிலே நாங்கள் குதர்க்கம் பேசிக் கொண்டிருப்பது எமது சமுதாயத்திற்குரிய அனுகூலமான விடயம் அல்ல என்பதை எமது பெரியவர்கள்; உணர்ந்து கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்ஃககுஃ வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (16) பகல் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமுகவாளர்கள், அரசியற் துறையிலே இருக்கின்ற அனுபவம் வாய்ந்த அரசியலாளர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை மனதிலே வாங்கிக் கொண்டு அதன் முடிவிடம் வரையில் தொடர்ந்து செல்வதன் மூலம் தான் நாங்கள் வெற்றிகளை அடைய முடியும். அவ்வாறில்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய மேதாவிலாசத்தைக் காட்ட முற்படுவதன் காரணமாக நம்முடைய சமுதாயம் வாழ முடியாமற் போய்விடும்.

எமது சமுதாயத்தில் பந்துகளையெல்லாம் மற்றவர்களுக்குத் தூக்கிப் போடுவதில் தான் நாங்கள் பெருமை கொள்பவர்களாக இருக்கின்றோம். இன்றைய முகப்புத்தகங்கள் எல்லாம் அவற்றைத் தான் தற்போது எழுதிக் கொண்டிருக்கின்றன. என்ன பண்ணிக் கிழிச்சாங்க என்று கேட்பதில் நாங்கள் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கருமங்களை எடுத்துக் கொண்டு செயற்படுகின்றவர்கள் யார் என்பதை நாங்கள் அடையாளம் காணாதவர்களாக இருக்கின்றோம்.

இந்த நாட்டினுடைய அரசியல் நடப்பியலில் மிகப் பெரிய விடயம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தலைவிதியை எழுதுகின்ற விடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அறுபது எழுபது ஆண்டுகளாக நாம் அனுபவித்த துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டும் என்பதற்காக வாய்த்த ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இது வெறுமனே அமையவில்லை. எமது தலைவர்கள் மிகவும் கருத்தோடு, கண்ணியத்தோடு, மிகக் கவனமாக, இராஜதந்திரத்தோடு கையாண்டே இப்போது இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் கூசாவுக்கு அடியில் இருக்கும் தண்ணீரை எப்படிக் குடிப்பது என்று கேள்வி கேட்கும் காக்கையைப் போன்றே பலர் இருக்கின்றார்களே ஒழிய அருகில் இருக்கின்ற கல்லை எடுப்போம், அனைவரும் சேர்ந்து கூசாவிற்குள் இடுவோம், அள்ளி வருகின்ற தண்ணீரைக் குடிப்போம் என்று எவரும் நினைப்பதாக இல்லை. இந்த நாட்டிலே பல மேதாவிகள் தொடர்பில் இந்த நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று 2000ம் ஆண்டுகளில் குரல் கொடுத்தவர் ஜி.எல் பீரிஸ் அவர்கள் ஆனால் அவர் தற்போது தலை கீழாக நிற்கின்றார். அது போன்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவரும் சேர்ந்து தான் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு வரையும் உழைத்தவர். தற்போது அவர் அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த அரசியலமைப்புச் சபையைக் கலைத்து விடுங்கள் என்று. இவையெல்லாம் எமது நாட்டுக்குக் விளைந்த மிகப் பெரிய துர்ப்பாக்கியம். இவர்கள் போன்ற மிகப் பெரிய அறிஞர்கள்இந்த நாட்டினுடைய துயரத்தைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்கள் என்றால் அவர்கள் எங்கோ விழுந்து விட்டார்கள்.

எமது நீதியரசர் ஐயா அவர்களையும் இந்த வகையிலே தான் நாங்கள் கொண்டு வந்தோம். அவரும் மிகப் பெரிய மேதாவி ஆனால் இப்போது அவர் இந்த அரசியலமைப்புச் சட்டத்திலே எதுவுமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எமது வடமாகாண முதலமைச்சர் ஐயா அவர்கள் தற்போது ஒன்றுக் கொன்று மாறான கருத்துக்களைச் சொல்லி வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அவர் பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை ஆனால் ஐயாவுக்கு நான் ஒன்று சொல்லுவேன் நாங்கள் ஊர்கூடித் தேர் இழுக்கின்ற சந்தர்ப்பம் இது. அரசியலமைப்புச் சட்டம் என்பது நாங்கள் வரைந்து கொடுத்து புள்ளிகள் பெறுவதல்ல.

எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் கொண்ட மக்கள், காலாகலமாக அரசியலைத் தனது கையில் எடுத்து பம்பரமாக்கிப் பாவித்தவர்கள், அவர்கள் மத்தியிலே எங்களுடைய இந்த உரிமை சார்ந்த விடயங்களை நாங்கள் கொண்டு சென்று, அவர்களோடு விவாதித்து, எங்களுக்குத் தேவையான கூட்டாட்சி என்று சொல்லப்படுகின்ற சமஷ்டி ஆட்சியை தென்பகுதி இது தொடர்பாக கலகம் விளைவித்து விடாத வகையிலே அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டு பெற்று எடுக்கின்ற மிகப் பெரிய கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் எமது தலைவர்கள் அதற்கு அனுசரணை, ஒத்துழைப்பு புரிய வேண்டும்.

தென்னகத்தில் எமது விடயங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது வடக்கு கிழக்கிலே நாங்கள் குதர்க்கம் பேசிக் கொண்டிருப்பது எமது சமுதாயத்திற்குரிய அனுகூலமான விடயம் அல்ல என்பதை இந்தப் பெரியவர்கள் எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரே தலைமை, அந்தத் தலைமை சொல்லுகின்ற மிக உன்னதமான கருத்துக்களில் தெளிவு பெற வேண்டும். தற்போது இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே இந்த மிகப் பெரிய வியூகத்துக்குள்ளே இருந்து வெற்றி காணுகின்ற செயற்பாட்டில் எமது தலைமை மிகக் கவனமாக நிதானமாக இது ஒரு தூய்மையான பணி என்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தச் செயற்பாட்டிற்கு ஒத்துழைக்க வாருங்கள் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களையும் ஐயா விக்கிணேஸ்வரன் அவர்களையும் மீண்டும் மீண்டும் அழைக்கின்றேன். எமக்குள் பேசி எமது வேற்றுமைகளையெல்லாம் நீக்கிக் கொண்டு உண்மையைக் கண்டறிந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.