வருடாந்த திட்டமிடல் அறிக்கையில் குறிப்பிடும் விடயங்களை பாடசாலைகள் முழுமையாக நிறைவேற்றுவதில்லை.

0
419

(படுவான் பாலகன்)  வருடாந்தம், பாடசாலைகளினால் வழங்கப்படுகின்ற வருடாந்த திட்டமிடல் அறிக்கைகளில், குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அப்பாடசாலைகள் செய்து முடிப்பதில்லை. என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நேற்று(14) மாலை நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வினை பார்வையிட்டதன் பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்,
பாடசாலைகளினால் வருடாந்தம், வருடாந்த திட்டமிடல் அறிக்கைகள் வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்படுகின்றன. அவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் அப்பாடசாலைகள் செய்வதில்லை. இதற்கு காரணம் அதிகமான விடயங்களை குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் உண்மையில் செய்து முடிக்க கூடிய வேலைகளை மாத்திரம் திட்டமிடுவதன் மூலமாக திட்டமிடல்களை வெற்றிபெற வைக்க முடியும். அதேபோன்றுதான் மாணவர் பாராளுமன்ற நடவடிக்கையின் போதும் பாடசாலையில் பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றில் தற்போதைக்கு அவசியமானது எனக்கருதுகின்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றிற்கு முன்னுரிமையளித்து மேற்கொள்வதன் மூலமாக பலவிடயங்களை பாடசாலையில் மேற்கொள்ளலாம்.
திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற போது, காட்டுகின்ற ஆர்வத்தினைப் போன்று இறுதிவரை நாம் காட்டுவதில்லை. இதனால்தான் திட்டங்கள் வெற்றிபெறாமல் செல்லுகின்றது. இதற்கு மாறாக ஆரம்பத்தில் காட்டுகின்ற ஆர்வத்தினை போன்று இறுதிவரை காட்ட வேண்டும். இதற்கேற்ற வகையில் மாணவர்களை வளர்க்க வேண்டும்;.
இதயத்திலிருந்து வெளிவருகின்ற விடயங்கள்தான் மற்றவரின் இயத்தினை தொடும். அவ்வகையில் எமது செயற்பாடுகளும் இதயத்திலிருந்து வெளிவரவேண்டும். அப்போதுதான் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை கட்டியெழுப்ப முடியும். கல்வியில் அபிவிருத்தி கொண்ட வலயமாக மாற்றுவதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.