மட்டக்களப்பு படுவான்கரைக்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி கோரிக்கை.

0
655

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திற்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி மாகாணசபைக்கென தொகுதிகளை நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்படி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை அதிபரும் சமூக செயற்பாட்டாளருமான கே.தங்கராஜா அவர்களும் மற்றுமொரு சமூக செயற்பாட்டாளரான துறைநீலாவணை தேவசகாயம் அவர்களும் இக்கோரிக்கையினை முன்வைத்து மேற்படி ஆணைக்குழுமுன் சாட்சியமளித்தனர்.
மேலும் இது தொடர்பாக எழுத்துமூலமான மகஜர் ஒன்றையும் அவர்கள் மேற்படி ஆணைக்குழுவிடம் கையளித்தனர். அம்மகஜரில் கூறப்பட்டுள்ளதாவது.

மாகாண சபைத் தொகுதி எல்லை நிர்ணயம் மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 1070 சதுர மைல் பரப்பளவு உடையது. இம் மாவட்டத்தினை 42 சதுர மைல் பரப்பளவுடைய மட்டக்களப்பு வாவி இரண்டு கூறுகளாகப் பிரிக்கின்றது. கிழக்குப் பகுதி எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதி படுவான்கரை என்றும் அழைக்கப்படுகிறது. 80மூ மான பிரதேசம் படுவான்கரையை உள்ளடக்கி இருப்பதால் இப் பிரதேசத்திற்கென இரண்டு தொகுதிகளை சிபாரிசு செய்யும்படி கோரிக்கை விடுக்கின்றோம்.
எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைத்து பாரராளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட காரணத்தினால் படுவான்கரைப் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. தொகுதி எல்லை நிர்ணயம் செய்யும்போது புவியியல் அமைப்பு கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். எனவே படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைத்துத் தொகுதிகளாக பிரிப்பது பொருத்தமற்றதாகும்.
துறைநீலாவணைக்கும் செங்கலடி கறுத்தப்பாலத்திற்கும் இடையே மேற்கேயுள்ள பிரதேசம் படுவான்கரைக்குள் அடங்கும்.
இதற்குள் 1) போரதீவுப் பற்று 2) பட்டிப்பளை 3) வவுணதீவு 4) ஏறாவூர் மேற்கு ஆகிய 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்குகின்றன.
பிரதேச செயலாளர் பிரிவு சனத்தொகை
⦁ போரதீவுப்பற்று – 36222
⦁ பட்டிப்பளை – 24026
⦁ வவுணதீவு – 28489
⦁ ஏறாவூர் மேற்கு – 75428
மொத்த சனத்தொகை – 1,64,165
இவற்றுள் முதல் மூன்று பிரிவுகளையும் இணைத்து கொக்கட்டிச்சோலை என்ற பெயரில் ஒரு தொகுதி உருவாக்கப்பட வேண்டும். ஏறாவூர் மேற்கில் கரடியனாறு என்ற ஒரு தொகுதி உருவாக்கப்பட வேண்டும்.
எழுவான்கரையில் களுவாஞ்சிகுடி என்ற பெயரில் ஒரு தொகுதி உருவாக்கப்பட வேண்டும். இதற்குள்.
பிரதேச செயலாளர் பிரிவு சனத்தொகை
⦁ மண்முனை தென் எருவில் பற்று 60,807
⦁ மண்முனைப் பற்று (ஆரையம்பதி) 30,694
மொத்த சனத்தொகை 91,501

மேலும் தொகுதிகளைப் பெயரிடுவதில் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பின்வருமாறு பெயரிட வேண்டும்.
பட்டிருப்புப் பிரதேசத்தில் உருவாக்கப்படவுள்ள தொகுதி பட்டிருப்பு எனப் பெயரிடப்படக்கூடாது. ஏற்கனவே பட்டிருப்பு என்ற பெயரில் பாராளுமன்றத் தொகுதி இருப்பதால் மாகாணசபைத் தொகுதியை வேறு பிரித்தறிய புதிதாக உருவாக்கப்படவுள்ள மாகாணசபைத் தொகுதிக்கு களுவாஞ்சிகுடி எனப் பெயரிடவேண்டும்.
கல்குடா தொகுதியில் உருவாக்கப்படவுள்ள மாகாணசபைத் தொகுதிக்கு வாழைச்சேனை எனப் பெயரிடவேண்டும். ஏனெனில் பாராளுமன்றத் தொகுதியாக கல்குடா இருப்பதால் வேறு பிரித்தறிய வாழைச்சேனை எனப் பெயரிடுவதே பொருத்தமானதாகும்.
எனவே மேலே கூறப்பட்ட கருத்துக்களை பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கின்றோம் என்று தெரிவித்கப்பட்டுள்ளது.