அரசுக்கு ஆதரவாக கைதூக்குவோருக்கு 2 கோடி

0
305

மைத்திரி  ரணில் அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டரை வருடங்களாக வழங்கிய வலிந்த விட்டுக் கொடுப்புகளினாலும் நல்லிணக்கத்தினாலும் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகளில் ஒன்றையாவது கூட்டமைப்பு தலைமையினால் சுட்டிக்காட்ட முடியுமாவெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான. சிவசக்தி ஆனந்தன், அரசுக்கு வழங்கிய வலிந்த ஆதரவுகளினால் தமிழ் மக்களின் முகங்களில் விழிக்க முடியாத நிலை தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து  கொண்டு அரசுக்கு ஆதரவாக கைதூக்குவோருக்கு 2 கோடி ரூபா வரையிலான விசேட நிதி வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி., கூட்டமைப்பில் தன்னைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் பலரும் கட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு கிடப்பதாகவும் எனினும் தலைமையின் சர்வாதிகாரத்தினால் அவர்களின் மனம் நெருப்பாக எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மேலும் கூறுகையில்;
எங்களிடமிருந்து மட்டுமே விட்டுக்கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் அரசும் சிங்களவர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து கடந்த இரண்டரை வருடங்களில் எந்தவித விட்டுக் கொடுப்புகளும் நல்லிணக்க நடவடிக்கைகளும் கிடையாது.

எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை வலிந்த பல விட்டுக் கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் கண்ட பலன் எதுவுமில்லை.
தமிழ் மக்களின் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சிறு பிரச்சினைகளைக் கூட இந்த அரசு தீர்த்து வைக்கவில்லை. காணாமல் போனோரை தேடி வீதியோரங்களில் 8 மாதங்களுக்கும் மேலாக போராடும் பெற்றோர், உறவினர்களுக்கு இந்த அரசு தீர்வு பெற்றுக் கொடுத்ததா? காணியை விடுவிக்க கேட்டு போராடும் மக்களுக்கு தீர்வு கொடுத்ததா? அரசியல் கைதிகளின் விடுதலை கோருவோருக்கு தீர்வு கொடுத்ததா? வேலை வாய்ப்புகள் கேட்டு போராடுவோருக்கு தீர்வு கொடுத்ததா? தமிழர் பகுதிகளில் தமிழ் அதிகாரிகள், அரச அதிபர்களை நியமியுங்கள் என்ற கோரிக்கைக்கு இந்த அரசு தீர்வு கொடுத்ததா?
யுத்த காலத்தில் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளியாக இருந்தாலும் கூட, அவர் 12,000 போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தார். ஆனால் இந்த அரசு தனது இரண்டரை வருட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன? எதுவுமில்லை.

ஆனால் இந்த அரசுக்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பல வலிந்த விட்டுக்கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு  ஆணை பெறப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறிச் செயற்பட எந்த உறுப்பினருக்கும் தலைவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பு செயற்படுவதாகவிருந்தால் அதனைக் கூறி மீண்டுமொரு மக்கள் ஆணையை பெற வேண்டும்.
தமிழ்க் கூட்டமைப்பில் இன்று சர்வாதிகார தன்மையுள்ளது. உறுப்பினர்கள் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவாக கைதூக்கும் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா வரையிலான விசேட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, அடுத்த முறையும் தேர்தலில் அவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளை தலைமை மேற்கொண்டுள்ளது. அரசை விமர்சித்தால் பேச்சு வலிமை பறிக்கப்படும். பழிவாங்கல்கள் இடம்பெறும். ஆனால் இவற்றுக்கெல்லாம் பயந்தவன் நானல்ல.
அரசுக்கு வலிந்த ஆதரவுகளை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று தமிழ் மக்கள் முன்பாக செல்ல முடியாத, அவர்களின் முகங்களில் விழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் இந்த அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவின் மூலம் கண்ட பலன் என்றார்.