தமிழ்தேசிய கூட்டமைப்பு உடைவது தமிழர்களைப் பலவீனப்படுத்தும்

0
206

தமிழர்களின் பிரச்சினைக்கு இரா.சம்பந்தனின் தலைமையில் 2020 ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (13) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சில கட்சிகள் வெளியேறி, மாற்றுக்கட்சியை உருவாக்குவது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் தற்போது அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். எனவே த.தே.கூட்டமைப்பை உடைக்காது 2020 ஆம் ஆண்டுக்குள் தீர்வைப்பெற முயற்சிக்க வேண்டும்.

தமிழீழத்துக்கான போராட்டம் மௌனித்த நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.

பிரபாகரனுக்கு நடந்தது பற்றி கடந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

யுத்தத்துக்கு பின்னரான காலத்தில், தமிழர்களின் தலைவராக இரா.சம்பந்தனையே ஏற்றுக்கொண்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தனை ஏற்றுள்ளனர்.

அரசாங்கத்துடன் சில விட்டுக்கொடுப்புகளை செய்து தீர்வைப்பெற முயற்சிக்கின்றார். இனியொரு தலைவரை எதிர்பார்க்க முடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனூடாகவே தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு தலைவர் உருவாக இன்னுமொரு 30 வருடங்கள் தேவைப்படும். சிலரின் சுயநலங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க முடியாது.

கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் இனவாதமின்றி மிதவாத போக்குடையவர்களாக இருக்கின்றனர். புதிய தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது.

கூட்டமைப்புக்குள் சில,சில பிரச்சினைகள் இருந்தாலும் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வடக்கு,கிழக்கு இணைப்பையே புலிகளின் தலைவர் வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கு இணைப்பை பாதிக்கும் வகையில் கட்சிகளின் மோதல்கள் இருக்கக்கூடாது.