தமிழ் மக்கள் பேரவை வரலாற்றுத் தவறொன்றை விட்டு விடக்கூடாது

0
273

உணர்ச்சி மேலீட்டால் எடுக்கின்ற முடிவுகள் வலாற்று தவறாக அமைந்து விடும். மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும். தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ வெறுக்கவில்லை அதிலே உள்ள சில தலைவர்களின் போக்குகளையே அவர்கள் வெறுக்கிறார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் 12வது கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்திலே நவம்பர் 12 அன்று இடம் பெற்ற போது அங்கு பேசிய இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் அறுபதெழுவது வருடங்களாக இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எமது தலைவர்கள் போராடியே வந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்றுப் போனதே வரலாறு. பண்டா செல்வா ஒப்பந்தம் மேற்கொண்டார்கள் அது தோல்வியில் முடிந்தது. டட்லி செல்வா ஒப்பந்தம் மேற்கொண்டார்கள் அதுவும் தோல்வியில் முடிந்தது. இனப் பிரச்சினை தீர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தோ லங்கா ஒப்பந்தம் அதுவும் தோல்வியே. இன்று இடம் பெற்று வருகின்ற அரசியலமைப்பு முயற்சிகளும் தோல்வியில் முடிகின்ற அறிகுறிகளே தென்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்  எடுத்த முயற்சிகளின் தோல்விகளுக்கு அவர்களது இயலாமை காரணமாக இருக்கலாம். அவர்களது இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையில் பலவீனங்கள் இருக்கலாம். இவற்றை வைத்துக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கட்சியையோ கூட்டுக்கட்சிகளையோ புறந்தள்ளிவிட முடியாது. அவற்றை வழிப்படுத்தும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே தமிழ் மக்கள் பேரவை மேற்கொள்ள வேண்டும்.. மாறாக உணர்ச்சிகரமான எண்ணங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது வரலாற்றுத் தவறாக அமைந்துவிடும். மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதே வரலாற்றுப் பதிவாக அமையும். இருக்கின்ற தமிழர் கட்சியைப் பலப்படுத்த வேண்டுமேயல்லாது பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றார்