வடக்கு, கிழக்கை மையப்படுத்தி புதிய அரசியல் கூட்டணி

0
432
வடக்கு, கிழக்கை மையப்படுத்தி புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணையாக செயற்படக்கூடிய வகையில் இந்தக் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்திச் சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளும் இதுவரைக் காலம் இடம்பெற்றுவந்த தேர்தல்களில் போட்டியிட்டன.
எனினும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மாற்று கூட்டணியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில், சில கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன.
ஏற்கனவே, தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு தற்போது வடக்கு, கிழக்கில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனின் இணைத் தலைமையில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
இதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிடட மேலும் பலர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல என அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் விடுத்திருந்த செய்திக் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
 எவ்வாறிருப்பினும், இந்த அமைப்பு செயற்பட்டு வரும் பின்னணியில்தான்  வடக்கு, கிழக்கில் புதிய கூட்டணியொன்றை அமைக்கும் பேச்சுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகின்றன.