கசிப்பு உற்பத்தி தொடர்பில் பொலிஸாரிடம் கூற சலனப்பட்டால் கிராமசேவகரிடம் கூறுங்கள்

0
469

(படுவான் பாலகன்) சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பொலிஸாரிடமும் கூறுவதற்கு அஞ்சினால் உங்கள் பகுதியிலே உள்ள கிராமசேவை உத்தியோகத்தரிடம் குறிப்பிடுங்கள் என தாந்தாமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.முகீஸ் தெரிவித்தார்.

போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கும், கிராமத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்குமான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர், அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான செயற்பாடுகள் நடைபெற்றால், அது தொடர்பில் எமக்கு அறிவித்தல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்திகள் செய்யப்பட்டால் எமக்கு உடனடியாக அறியத்தாருங்கள். அவ்வாறு அறிவித்தல் வழங்கினால் அறிவித்தல் வழங்குபவர்களின் பெயர்களை உரிய நபர்களிடம் கூறிவிடுவார்களோ என்ற அச்சம், சந்தேகம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படலாம். அவ்வாறு யாரிடமும் குறிப்பிடமாட்டோம். உங்களுடைய இரகசியங்கள் அனைத்துமே பாதுகாக்கப்படும். நீங்கள் என்னிடம் அச்சமின்றி  குறிப்பிடலாம். அல்லது அவ்வாறு கூறுவதில் உங்களுக்கு சலனங்கள் இருந்தால், உங்கள் பகுதியிலே உள்ள கிராமசேவை உத்தியோகத்தரிடம் கூறுங்கள். நாட்டிலே நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மட்டுமில்லாது, இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் தீய செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது மிகவும் கஸ்டமான காரியமாகும். என்றார்.

இதன்போது, எந்தவித போதைப்பொருட்களையும் நுகரமாட்டேன் என மாணவர்களும், இளைஞர், யுவதிகளும் சத்தியம் செய்துகொண்டனர். மேலும் போதையற்ற நாட்டினை உருவாக்கும் வகையிலான குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வித்தியாலய அதிபர், பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர், அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.