தோண்டி எடுக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் சடலம்கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

0
750
தோண்டி எடுக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் சடலம் பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு  மீள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு  அறையில் வைக்கப்பட்டுள்ளது..

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் கிராமசேவை உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 2016.04.15 ஆம் திகதி அன்று எருவில் கிராமத்தில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2017.09.28 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது மரணமடைந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் சார்பாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி ஆஜராகியிருந்தார். இதன்போது அவர் குறித்த மரணம் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிவதற்கு பிரேதத்தை மீள் பிரேத பரிசோதனை நடாத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க  பிரேதத்தைத் தோண்டி எடுத்து மீள் பரிசோதனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிணங்க கடந்த செவ்வாய்  கிழமை (31) களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி, சட்டவைத்திய அதிகாரி இனோக்கா அடங்கிய குழுவினர் முன்னிலையில் பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட பிரேதமானது உரிய முறையில் பொதி செய்யப்பட்டு கிராம சேவை உத்தியோகத்தரின் உறவினர்கள் இருவர் அடங்கலாக  களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிசாரின் இணைந்த பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேதம் சட்டபூர்வமாக மீள் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓப்படைக்கப்பட்ட பிரேதத்தின் மீள்பிரேத பரிசோதனையை  பிரதம சட்டவைத்திய நிபுணர் அஜித்தென்னக்கோண் தலைமையில் நால்வர் அடங்கிய குழுவினால் மிகவும் நுணக்கமாகவும், நுட்பமாகவும் மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை கிடைத்ததும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கிராமசேவை உத்தியோகத்தர் சார்பான சட்டத்தரணி தெரிவித்தார்……