கள்ளன், பொலிஸ் விளையாடியவர்கள் பொது இடங்களில் பணத்திற்கு கடதாசி விளையாடுகின்றனர்.

0
626

(படுவான் பாலகன்) பொழுதுபோக்கிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும், அன்று கள்ளன், பொலிஸ் விளையாடிய இளைஞர்கள், இன்று பொது இடங்களில் பணத்திற்கு கடதாசி விளையாடுகின்றனர். என மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.தயாசீலன் தெரிவித்தார்.
போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்;ட இளைஞர், யுவதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(31) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது போதைப்பொருள் தொடர்பிலான விவாதமும் இடம்பெற்றது.
இளைஞர் சேவை உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பொலிஸ், பொதுச்சுகாதார உத்தியோகத்தரும் கலந்து கொண்டு போதைப்பொருள் தொடர்பிலான கருத்துக்களை வழங்கினர்.
குறித்த நிகழ்வில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலே உள்ள இளைஞர், யுவதிகள் பல விளையாட்டுக்களை பொழுபோக்கிற்காக விளையாடினர். குறிப்பாக கள்ளன் பொலிஸ் போன்ற விளையாட்டுக்களைக் கூட குறிப்பிட முடியும். இவ்வாறான விளையாட்டுக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுத்ததுடன், மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய இளைஞர்கள் பொது இடங்களிலே, மரநிழல்களிலே பணத்திற்காக கடதாசியினை விளையாடுகின்றனர் இதனால் வீண் பிரச்சினைகளும், கலாசார சீரழிவுகளும் ஏற்படுகின்றன. இவற்றினை இல்லாமல் செய்ய வேண்டும். அதே போல வீட்டுக்கு வீடு சிறிய மதுபான உற்பத்தி நிலையங்களும் உருவாகி வருகின்றன. குறிப்பாக சட்டவிரோதமான முறையிலே வடிசாரயம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. இதனை இளைஞர்களும் அதிகம் அருந்துகின்றனர் இதனால் சமூகசீர்கேடுகள் பலவும் இடம்பெறுகின்றன. இவ்வாறானவற்றினை இல்லாமல் செய்வதற்கு இளைஞர்கள் ஒன்றுசேர வேண்டும். என்றார்.