வேப்பவெட்டுவான் மதகினை பத்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க ஸ்ரீநேசன் எம் பி நடவடிக்கை

0
1162

வேப்பவெட்டுவான் – மாவடியோடை பாதையில் அமைந்துள்ள மதகு புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (25.10.2017) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது..

இந்த மதகின் ஊடாக மாரி காலத்தில் பாய்ந்தோடும் வெள்ளநீர் பல உயிர்களை காவு கொண்ட சம்பவங்கள், இப்பகுதியில் உள்ள சகல மக்களும் அறிந்த விடயமாகும்.கடந்த காலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இம்மதகில் பறிக்கப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இறுதியாக 2011 ஆம் ஆண்டு வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தமது கால்நடைகளை பராமரித்து வந்த தம் உறவுகளுக்கு உதவுவதற்காக சென்ற இரு இளவயது சகோதரர்கள் இம்மதகில் சென்ற வெள்ளநீரினால் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

பச்சைப்பசேல் என பரந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் வேளாண்மை, தோட்டச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.மாரிகாலத்தில் இந்த மதகின் ஊடாக செல்லும் வெள்ளநீர் இப்பாதையின் ஊடாகச் செல்லும் மக்களுக்கு பெரும் சவாலாகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது.

தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோது இப்பிரதேச மக்களும் ,விவசாயிகளும் ,களஉத்தியோகத்தர்களும் ,இந்த ஆபத்தான மதகினை பாதுகாப்பானதாக அமைத்து மாரிகாலத்தில் அச்சமின்றி இப்பாதையில் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு அமைத்து தருமாறு கோரிக்கையினை முன் வைத்ததாகவும் அடிக்கல் நாட்டு விழாவினை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.மேலும் அங்கு உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் தனது தந்தையாரும் உறவினர்களும் கூட இப்பகுதியில் கால்நடைகளை வைத்துப் பராமரித்தமையினால் தனக்கும் இப்பகுதி ஓரளவு பரிச்சயமானதாக இருந்ததாகவும்,குறிப்பாக இப்பகுதி கிராம உத்தியோகத்தர் திரு.பிரதீப் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் அடிக்கடி இவ்விடயம் தொடர்பாக தனக்கு நினைவூட்டிக் கொண்டிருந்ததாகவும் ,இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ.அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது,அவரிடம் வேண்டுகோள் விடுத்துப் பெற்றுக் கொண்ட பத்து மில்லியன் ரூபா நிதியினை கொண்டு இந்த மதகினை   புனரமைப்பதற்காக அனுமதியினை பெற்றுக்கொண்டதாகவும் ,இந்த நிதியினை பெறுவதற்கும் ,மதகினை புனரமைப்பதற்கான அமைச்சின் அனுமதியினை பெற்றுத்தருவதற்கும் ஒத்துழைப்பை வழங்கிய மாவட்ட அனர்த்த முகாமை உத்தியோகத்தர்.திரு.இன்பராஜா அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இம்மதகு புனரமைப்பு பணிகளை இன்று ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்த ஏறாவூர்பற்று,செங்கலடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர்,பிரதேச அனர்த்த முகாமை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு , வேப்பவெட்டுவான்,காரைக்காடு பகுதியில் அமைப்பதற்கென முன்மொழியப்பட்டு கைவிடும் நிலையிலிருந்த கிராமிய பாலத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் கூறி, அதன் 30 % மான பணிகள் தற்போது முடிவுற்றுள்ளதாகவும் எதிர்வரும் மார்கழி மாதமளவில் இதனை மக்களது பாவனைக்கு விட முடியுமென எதிர்பார்பதாகவும் தெரிவித்தார்..

தன்னை முதன்மை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்த தனது மாவட்ட மக்களுக்கு, தன்னலமற்ற முறையில் சேவை செய்து அவர்களின் சமூக,கல்வி,கலாசார,பொருளாதார,உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதோடு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்ய பாடுபட வேண்டும் என்பதே தனது இலச்சியமாகும் எனவும் அங்கு அவர் உரையாற்றினார்.

மேலும் அங்கு உரையாற்றிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் , இந்த மதகினை புனரமைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிதியினை பெற்றுக்கொண்ட விதத்தினையும் புனரமைப்பு வேலையினை துரிதப்படுத்த தம்மை பலதடவைகள் தொடர்பு கொண்டமையினையும் நினைவு கூர்ந்தார்.கிராம சேவை உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் சேவைக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றினார்கள்.