மட்டு.பன்சேனையில் மாற்றுப்பாதையின்மையினால் போக்குவரத்து செய்வதில் பயணிகளுக்கு சிரமம்.

0
405

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்சேனைக்கு செல்லுகின்ற பிரதான வீதியில் சில்லிக்கொடியாறு பகுதியில் அமைக்கப்படும் பால நிர்மாண வேலைகாரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது, புதிய பாலம் அமைக்கப்படும் இடத்திலிருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இவ்வீதியினூடாக பயணிகள் போக்குவரத்து செய்வதற்கான தற்காலிக மாற்றுப்பாதை இல்லாமையினால், பயணிகள்  பாலம் அமைக்கப்படும் ஆற்றினை கடந்து செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இவ்வாற்றினால் நீர் அதிகம் செல்லுமாயின் உயிராபத்துக்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
வேலை ஆரம்பத்தின் போது, பாலம் அமைக்கப்படுவதற்கு அருகில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதிக மழை காரணமாக அவ்வீதி உடைந்துள்ளதாகவும், பால நிர்மாணப்பணியில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். பால நிர்மாண வேலை ஆரம்பித்துள்ள காலப்பகுதி மழைக்கான காலப்பகுதி என்பதினால், இக்காலப்பகுதியில் இவ்வாற்றினூடாக அதிகளவான நீர் செல்வதாகவும், இதனால் ஆற்றினை மறித்தோ, சிறிய குழாய்களை இட்டோ இதில் மாற்றுப்பாதையினை அமைக்க முடியாதென இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். அதேவேளை மழை காலப்பகுதியில் இவ்வாறான நிர்மாணப்பணிகளை மேற்கொள்வது பொருத்தமற்றதெனவும், கடந்த காலங்களிலும் உன்னிச்சைவரை செல்லும் இவ்வீதியில், பன்சேனை, கண்டியநாறு ஆகிய வீதிகளில் அமைக்கப்பட்ட புதிய பாலங்கள் அதிக மழைகாரணமாக உடைந்ததாகவும், பின்னர் மீண்டும் அவை அமைக்கப்பட்டதாகவும் இங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.
விவசாயிகள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப்பலரும் அன்றாடம் இவ்வீதியினூடாக போக்குவரத்து செய்கின்றனர். இந்நிலையில் வீதி உடைக்காமல் இருப்பதற்கேற்ற நீர் வடிந்தோடக்கூடிய அளவிலான குழாய்களை இட்டு, மாற்றுப்பாதையினை அமைத்து, போக்குவரத்து செய்யக்கூடிய வசதியினை ஏற்படுத்தி வழங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.