கோதாபய முகாமில் பாரிய மனிதப் புதைகுழி?

0
634

முல்லைத்தீவில் கோதாபய கடற்படை முகாம் உள்ள பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி இருப்பதாக தான் சந்தேகமடைவதாக நாம் தமிழர் கட்சியின்  சீமான் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் கோதாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இதன் பின்புலத்தில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என பல்வேறு தரப்பும் சந்தேகம் வெளியிட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை உறுதிப்படுத்தும் விதமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பகுதியில் தமிழ் மக்களின் உடல்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு நிலத்தை விடுவித்தால் அவர்கள் தமது தேவைகளுக்காக நிலத்தைத் தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டுள்ள உடல்கள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் போன்றவை வெளிவரும் என்ற அச்சத்திலேயே இலங்கை அரசாங்கம் அதனை விடுவிக்காதிருக்கிறது.
இந்தப் பகுதியில் எண்ணற்ற பொது மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இது உண்மையில்லை என்றால் அப்பகுதி நிலங்களை தோண்ட வேண்டும். மனித எலும்புக் கூடுகள், மண்டையோடுகள் வராவிடில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அந்த நிலத்தை விடாது அதனை படையினருக்காக சுவீகரிக்க முயல்கிறார்களென்றால், அதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்க வேண்டுமெனவும் சீமான் தெரிவித்தார்.

thinakkural