வடக்கில் 6 பேருக்கு எச்.ஐ.வி. தொற்றிய மூவர் உயிரிழப்பு

0
376

வட மாகாணத்தில் நடப்பாண்டில் எச்.ஐ.வி.  தொற்றுக்குள்ளான  6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில்  மூன்று  பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டிலிருந்து அண்ணளவாக 80 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி. சிகிச்சைப் பிரிவில் எச்.ஐ.வி.  தொற்றுக்குள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 30 பேரும் தற்போது  யாழ். மற்றும்  அநுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
நடப்பாண்டில் வடமாகாணத்தில் 6 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் என பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் இருந்து ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒருவரும் யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 63 வயதுடைய  ஒருவரும் இருவர் 50 வயது முதல் 60 வயது வரையானவர்களும் மூன்று பேர் 30 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்றும் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 3 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குகின்றார்கள்.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம்  காணப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் அண்மையில் உயிரிழந்துள்ளார்கள்.
எனவே  தொற்றுக்கள் பல வகையிலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும் எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் இன்றே பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்பது மிக மிக அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.