வாசிகம் கூடல் நிகழ்வை முன்னிட்டு கவி ஆற்றலை மேம்படுத்தும் களப்பயிற்சி

0
196

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாசிகம் கூடல் நிகழ்வை முன்னிட்டு மாணவர்களின் கவி ஆற்றலை மேம்படுத்துவதுடன், வெளிப்படுத்துவதற்குமான களப்பயிற்சியொன்று  செவ்வாய்க்கிழமை (24) பகல்  நடத்தப்பட்டது.

மாவட்ட கலாசார இணைப்பாளரும் கோரளைப்பற்று பிரதேச பதில் உத்தியோகத்தருமான த.மலர்ச்செல்வனின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த களப்பயிற்சியில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி, பேத்தாளை விபுலாநந்தா வித்தியாலயம், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், வாழைச்சேனை வாணி வித்தியாலயங்களின் ஆசிரியர்களும் இதன் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.

வாசிப்பின் முக்கியத்துவம், கவிதையின் பிறப்பு, மொழியாற்றல், இன்றைய நவீன கவிதையின் போக்கு பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், கவிதை எழுதுவதற்கான பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

ஆரம்பத்தில் களப்பயிற்சி நிகழ்வாக ஆரம்பித்த இந்த வாசிகம் கூடல் களப்பயிற்சி, கவிதா நிகழ்வாக முடிவுற்றது.

எதிர்வரும் மாதம் கோரளைப்பற்று பிரதேச கலாசாரப்பிரிவினால் வாசிப்புப் பழக்கத்தினை மக்கள் மத்திய்ல் ஊக்குவித்து எழுத்தாற்றலை மேம்படுத்தும் வகையிலும் இலக்கியத்துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் வாசிகம் கூடல் நிகழ்வு நடத்தவுள்ளது.

வாசிகம் கூடல் நிகழ்வினை முன்னிட்டு கவிதை மேம்பாட்டுக் களப்பயிற்சிகள், கட்டுரை எழுதுதல், சிறுகதை, விமர்சனம், விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த பயிற்சிகளும் எழுத்தாளர் அனுபவப்பகிர்வுகள் போன்றவைகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.