விமலின் கருத்து பாராளுமன்றுக்கு அச்சுறுத்தல்

0
156

பாராளுமன்றம் தொடர்பில் விமல்வீரவன்ச தெரிவித்த மோசமான கருத்துக்கு, எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பு வரைபு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமாயின், பாராளுமன்றத்துக்கு குண்டுவைத்தாவது அதை நிறுத்தப்போவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துத் தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதுடன், விசாரணைகளின் பின்னர் உறுப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கும், பொது மக்களின் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் விமல் வீரவன்ச எம்.பி கூறிய கருத்துத் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உயர்பீடமான பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் (18) பாராளுமன்றத்தில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை ஜே.வி.பியின் செயற்பாட்டாளர் அஜித் குமார முன்னெடுத்திருந்தார். மாத்தறை மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபயவிக்ரம பாராளுமன்ற அதிகாரி நொபேர்ட் சேனாதீர ஆகியோர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் இதில் காயமடைந்திருந்தனர்.

உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் வீரவன்ச கருத்துக்களைக் கூறி வருகின்றனார்.

இந்த செயற்பாடுகளிலிருந்து தமது கட்சி விலகிக் கொள்வதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். எனினும் அவருடைய விலகல் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சபாநாயகர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.