சுதந்திரத்தின் பின்னரான யாப்பில் சிறுபான்மையினத்தினர் கவனத்தில் கொள்ளப்படவில்லை

0
447
அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையின் அடையாளத்துடன் புதிய அரசியல் யாப்பொன்று நாட்டிற்காகத் தயாரிக்கப்படுமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இனவாத மோதல்களின்றி தேசிய ஐக்கியத்துடன் நாடு என்ற ரீதியில் இலங்கை தரமுயர்த்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர். சுதந்திரம் கிடைத்த பின்னர், தயாரிக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புக்களிலும் சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனாலேயே 30 வருட கால யுத்தம் இடம்பெற்றது என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவரத்தன ஆகியோரின் நிர்வாக காலப்பகுதியில் நாட்டிற்காக இரண்டு அரசியல் யாப்புக்கள் வகுக்கப்பட்ட போதிலும் அந்த சந்தர்ப்பத்தில் இவை இரண்டிலும் சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இவர்கள் நிராகரிக்கப்பட்ட நிலைமையைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இருப்பினும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுதந்திரத்தின் பின்னர், உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்களில் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுடன் அனைத்து இனத்தவரதும் உரிமைகளை பாதுகாக்கும் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது. இதனால், இனவாத மோதல் இன்றி அந்த நாடுகள் அபிவிருத்தியடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகள் 10 முக்கிய நாடுகளில் இடம்பிடித்துள்ளன.  இந்தப் பட்டியலில் இலங்கை 150வது இடத்திலேயே காணப்படுகிறது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.