இரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்

0
349

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும்,மகனும் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி,குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் அடித்துக்கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 06 பயிலும் பீ.மதுசன் அவரது தாயான 26வயதுடைய மதுசாந்தி பீதாம்பரம் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் படுகொலை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படுகொலையினைக் கண்டித்து கொலையாளிகளை விரைவில் கைதுசெய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை சமூகம்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

பாடசாலைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கியவாறு பிரதான வீதியுடாக குடியிருப்பு பொதுநூலகம் வரை சென்றனர்.