மாகாண சபை சேவைகளை பாதிப்பின்றி கொண்டு செல்லவும் – ஜனாதிபதி

0
236

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்து அறிந்துகொண்டார்.

 

அத்துடன் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகளை வேறு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள விதத்தில் செலவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

குறித்த மாகாணங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்து விசேட அவதானத்துடன் செயற்படுமாறும் அச்செயற்திட்டங்கள் வினைத்திறனான முறையில் முன்நோக்கிக் கொண்டு செல்லவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன் அவை அனைத்து நடவடிக்கைகளையும் மாகாண ஆளுநரின் ஆலோசனைகளுக்கேற்ப மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்வில் அமைச்சர் பைஸர் முஸ்தபா, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.