பொலிஸாரால் பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடவும்

0
926

“பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் தெரிவித்தார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் விழிப்பூட்டும் கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (11) மாலை நடைபெற்ற போது, அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,

“பொலிஸ் ஆணைக்குழுவில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

“பொலிஸாரால் பொதுமக்களுக்கு பாரபட்சம் காட்டப்படும் சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்கள், இந்த பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யமுடியும்.

“பொதுமகன் ஒருவனின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்தல், முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யப்படும் போது பக்கசார்பாக நடந்துகொள்ளல், முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்தல், முறைப்பாட்டாளருக்கு முறைப்பாட்டுப் பிரதியொன்றை வழங்க மறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், இங்கு செய்ய முடியும்.

“அதேபோன்று, பொலிஸாரும் தமது பதவியுயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டால், தொழிலில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டாலும் இங்கு முறையிட முடியும்.

“மூலமான முறைப்பாடுகளே பொலிஸ் ஆணைக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்படும். வாய் மொழி மூலமான எந்த முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

“பொதுமக்கள், தமது முறைப்பாடுகளை தமிழ் மொழியில் செய்ய முடியும்.

“உரியை முறைப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகரிடம் நாங்கள் விசாரணை புலனாய்வு அறிக்கையொன்றைக் கோருவோம்.

“அவர்கள் அந்த முறைப்பாடு தொடர்பில் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த புலனாய்வு விசாரணையை பொலிஸ் ஆணைக்குழுவே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எந்தவொரு அரசியல் தலையீடும் கிடையாது. சுயாதீனமாக செயற்படும் ஒரு ஆணைக்குழுவாகும்.

“இந்த ஆணைக்குழுவில் அமைச்சர்கள் கூட முறைப்பாடு செய்துள்ளனர்.

“தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைமையலுவலகம், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் 9ஆவது கட்டடத் தொகுதியில் உள்ளது.

“கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள், பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்ய விரும்பினால் எழுத்து மூலம் மாகாணப் பணிப்பாளர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சப்பல் வீதி, மட்டக்களப்பு எனும் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அல்லது சாதரண தபாலில் அனுப்பி வைக்க முடியும்” என்றார்.