தார்மீகக்கடமை இந்தியாவுக்கு இருக்கிறது – ஈரோஸ் பிரபா

0
775

இந்தியாதான் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது, 2009ல் முடித்தும் வைத்தது அந்த வகையில் வடக்குக்கிழக்குப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீகக்கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) யின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் இன்றைய தினம் புதன்கிழமை (11) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி வொயிஸ் ஒப் மீடிய நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கட்சியின் பொருளாளர் சுப்பிரமணியம் சிவபானந்தராஜா, பட்டிப்பளை வெல்லாவெளி கோட்டப் பொறுப்பாளர் சிவகுமார் ரகுநாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மகிந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மைத்திரி – ரணில் நல்லாட்சிக்காக தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள் ஆனால் தற்போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஏமாந்திருக்கிறார்கள். இந்தப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அந்த வகையில் மாற்றம் ஒன்றே தேவையாக இருக்கிறது. அதற்காக எமது கட்சி செயற்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு மலையகப்பிரதேசங்களில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இதே வேளை கிழக்கு மாகாணத்தில் சில அரசியல் தலைமைகள் தமது சுயநலத்துக்காக தமிழ் மக்களிடையே தனித்து நின்று லாபம் பெறும் நோக்கில் இனவாத அரசியலை முன்னெடுப்பதை தாம் வன்மையாகக்கண்டிப்பதுடன், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் எமது கட்சி வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் நேரத்தில் மாத்திரமல்ல அதற்கு முன்னரும் பல பணிகளை ஈரோஸ் மேற்கொண்டிருக்கிறது. ஏனைய ஆயுத அமைப்புக்கள் சிறிலங்கா இராணுவத்துடனும், இந்திய இராணுவத்துடனும் சேர்ந்து தமிழ் மக்களை துணைப்படையாக இருந்து சித்திரவதைகள் பலவற்றினைச்செய்து கொண்டிருந்த வேளை, ஈரோஸ் கணிசமான இளைஞர் யுவதிகளைக் காப்பாற்றியது, மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கியது. அதே நேரத்தில் வன்னி யுத்தம் முடிவுக்கு வரும் வேளையில் வவுனியாவில் களத்தில் நின்றது.
ஒரு மாற்றத்தைக் கொண:டுவர வேண்டும் ஏமாந்த மக்களை மாற்றத்தின் ஊடாக நல்ல தலைமைத்துவத்தினை உருவாக்க வேண்டும்.
அதனால் நடைபெறப்போகும் உள்ளுராட்சித் தேர்தலானாலும், மாகாண சபைத் தேர்தலானாலும் சரி ஒரு மாற்றத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மலையக மக்களுக்காக ஈரோஸ் தனித்துப் போட்டியிடும். அதன் மூலம் கணிசமான ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளும்.

சம்பந்தன் ஐயா 45 வருடங்களாக எதனைச் சாதித்திருக்கிறார் உதனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். எதனைச் சாதிக்கப் போகிறார் ஒன்றுமில்லை. எல்லாம் பூச்சியம். மக்கள் இன்று வெளியில் வந்துவிட்டார்கள். இவர்களால் முடியாது. வட கிழக்கு இணைகிறதா இல்லையா என்பதற்கு அப்பால். வடக்கு கிழக்கு மக்களுக்கு என்ன அதிகாரம் வேண்டும். மாகாண சபைக்கு என்ன அதிகாரம் வேண்டும் என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் தீர்மானிக்க முடியாது. சம்பந்தன் ஐயாவின் அரசியல் வரலாறாக இருக்கட்டும், அல்லது தமிழ் தேசியக் கூடு;டமைப்பின் அரசியல் வரலாறாக இருக்கட்டும் இதுவரை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.