படகுப் பாதைச் சேவையை இலவசமாக்கவும்

0
253

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை  படகுப் பாதைச் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று (11) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திகிலிவட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திகிலிவட்டை துறை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் இந்தப் பாதை ஊடாகவே பயணம் செய்கின்றனர்.

பயணத்துக்காக ஒரு வழிப்பாதைக்கு நபரொருவருக்கு 10 ரூபாயும் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு வேறாகவும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.

அத்துடன், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேலதிகக் கட்டணங்களும் அறவிடப்படுகின்றன.

குறித்த படகுப் பாதை, கோறளைப் பற்றுப் பிரதேச சபையால் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகம் குறித்த நடைமுறையை நிறுத்தி, சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரியே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் நடைபெறும் படகுப் பாதைப் பயணத்திற்கு கட்டணங்கள் அறவிடப்படடுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.