சந்திவெளியில் ஆரொடு நோகேன்

0
1742

நுண்கலைத்துறையின் சமூக நலப் பணிக்கான செயற்பாடுகளில் “ஆரொடு நோகேன்” எனும் நாடகம் அண்மையில் சந்திவெளி சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் மேடையேற்றப்பட்டது.
குழந்தை ம.சண்முகலிங்கத்தினால் எழுதப்பட்ட இந்நாடகம் நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமாரால் நெறியாள்கை செய்யப்பட்டு இரண்டு தடவைகள் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் சுமார் 1200 மாணவர்கள் நிறைந்திருக்க மேடையேற்றப்பட்டது என்பதும் குறிப்படத்தக்கது.
கல்குடாக் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடாதிபதி மு.ரவி அவர்களின் அனுமதியுடன் ஆசிரிய ஆலோசகர் திருமதி திரதீஸ்பரன் பரமேஸ்வரியின் இணைப்பாக்கத்தில் தரம் 10, 11 மாணவர்களுக்காக சித்தி விநாயக அதிபர் திரு.தவராசா அவர்களின் தலைமையில் ஆற்றுகை செய்யப்பட்டது.
இதில் சுமார் எட்டு பாடசாலைகளில்  நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கற்றல் – கற்பித்தலுக்கான தேர்ச்சியை கோட்பாட்டு ரீதியாகவும் செயன்முறை ரீதியாகவும் வலுப்படுத்த வழிவகுத்தது. மாணவர்கள் பார்த்தும் கேட்டும் கொண்டாடியும் மகிழ்ந்தும் ரசித்தனர். இதற்கு சு.சந்திரகுமாரின் நெறியாள்கையும் வெளிப்பாடும் அவரது நவீன, பாரம்பரிய நாடக அரங்க ஆளுமையின் வீச்சும் அதனால் உருவான மாணவர்களின் நடிப்பாற்றால் விருத்தியும் வழிவகுத்தது. நாடகத்தின் ஒவ்வொரு விடயமும் நுணுக்கமாக பயிற்சியின் மூலம் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளது. மிகவும் திறமையாக தமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை வார்த்து நடிகர்கள் பார்ப்போரைக் கிறங்க வைத்தனர். வடமோடி தென்மோடிக் கூத்தின் ஆட்டக் கோலங்கள் கோரஸின் ஆட்டத்தில் வெளிப்பட்டன.
யதார்த்த நாடகமாகக் காணப்பட்டாலும் அதன் ஆற்றுகை வெளியில் யதார்த்த விரோத நாடகப் பாணி நாடகச் சூழமைவை வெளிப்படுத்தக் கையாளப்பட்டது. யதார்த்த நாடகப் பாத்திரவாக்கம் நடிப்பின் போது அதற்குப் பொருத்தமான நடிப்பைக் கொண்டு வருவதாக அமைதல் வேண்டும். இதனை நெறியாள்கையும் நடிப்பும் தந்தது. நாடகத்திற்கான காட்சி விதானிப்பு, இசை விதானிப்பு, ஒளியமைப்பு, ஒப்பனை, மேடைக் கையாள்கை, ஆட்டக் கோலங்களின் அர்த்தப்பாடு, பாடலின் உயிர்ப்பு  என்பன காத்திரமாக கட்புல செவிப்புலத்தைப் பூர்த்தி செய்தது. பார்ப்போராக இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சிரித்தும், பாத்திரங்களுடன் இணைந்தும் வெறுத்தும், பரிதாபப்பட்டும், கோபப்பட்டும், உளம் நெகிழ்ந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தினர். கட்டிளமைப் பருவப் பிள்ளைகள் மாணவப் பருவத்தில் கல்வி நிலை நின்று எதிர்கொள்ளும் பிரச்சினை பெற்றோரின் எதிர்பார்ப்புடன் வருவதை அடிப்படையாகக் கொண்டதாகக் கதைக்கரு அமைந்துள்ளது.