மட்டு. மாவட்ட மக்களுக்குப் பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை பாக்கியமாகவே கருதுகின்றேன். – அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

0
530

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை எனக்குக்கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இங்கு என்னுடைய பணியை முழுமையாகச் செய்வதற்கு தடைகள் நிறையவே இருந்தன. அதனால் மக்களுடைய பல வாழ்வுகள் நழுவிப் போயிருப்பது குறித்து மனதிலே கவலையும் குறையுமிருக்கிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கடந்த ஐந்தரை வருடங்களாக மட்டக்களப்பில் பணியாற்றி சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவிஉயர்வு பெற்று செல்லும் அரசாங்க அதிபர் வெள்ளிக்கிழமை (28) பகல் நடைபெற்ற வாணிவிழா நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்துவது பெரியதொரு சவாலான விடயம். எந்த விழாவாக இருந்தாலும் கூடாரங்கள், பந்தல்களை அமைத்துக்கொண்டு நடத்துகின்ற நிலையே இருந்துவருகிறது. அடுத்த வாணிவிழா, இறைவனது ஆசியோடு திராய்மடுவில் அமைக்கப்பட்டு வருகிற புதிய மாவட்ட செயலகக்கட்டத்தில் நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான அத்தனை விடயங்களும் நடைபெற்றுக கொண்டிருக்கிறது. அதன் இரண்டாவது கட்டத்திற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்று, கடந்த அரசாங்க அதிபர் மாநாட்டில் கட்டம் இரண்டுக்கான நிதி 300 மில்லியனை ஒதுக்குவதற்கான அனுமதியினை ஜனாதிபதி அவர்கள் தந்திருக்கிறார். அங்கு முழுமையாக அத்தனை திணைக்களங்களும் இட நெருக்கடியற்று மக்களுக்கு பணியாற்றுவீர்கள், பணியாற்ற வேண்டும்.
அந்த நம்பிக்கையோடு தொடர்ந்தும் இந்த மாவட்டத்தில் நீங்கள் இருந்தாலும் , வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றமாகிச் சென்றாலும் இந்த மக்கள் மிகப்பாதிக்கப்பட்ட மக்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள். பல்வேறு அனர்த்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்த மக்கள், யுத்தத்தின் கொடுமைகளாலும், இயற்கையின் அத்தனை அனர்த்தங்களிலும் பாதிக்கப்படுகின்றவர்கள்.

உண்மையில் இந்த மாவட்ட மக்களுக்கு பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை எனக்குக்கிடைத்த பாக்கியமாகக்கருதுகிறேன். ஆனால் மனதின் ஓரத்திலே ஒரு சில கவலைகள் இருக்கிறது. என்னுடைய பணியை முழுமையாகச் செய்வதற்கு தடைகள் நிறையவே இருந்தன. பொதுவாக நான் எடுக்கின்ற முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது என்னுடைய நிருவாகத்திலே இருந்ததில்லை. நான் எடுத்த முடிவை முன்னைய காலத்தில் ஜனாதிபதி சொன்னால் கூட நான் பின்வாங்கியதில்லை. அதனை நடைமுறைப்படுத்தித்தான் வந்திருக்கிறேன். ஆனால் இந்த மாவட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக முழுமையாகப் பின்வாங்கிருக்கிறேன். பொதுவாக என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக எந்த ஒரு விடயத்தினையும் முன்னெடுத்ததில்லை. அதனால் மக்களுடைய பல வாழ்வுகள் நழுவிப் போயிருப்பதாக மனதிலே குறையிருக்கிறது. இனிவரும் காலத்தில் இங்கு கடமைக்கு வரும் புதிய அரசாங்க அதிபருக்காவது இப்படியான தடைகளை ஏற்படுத்தாமல் முழுமையாக இந்த அரச நிருவாகத்தை சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து இந்த மக்கள் உண்மையான பயனை இந்த அரச பணியின் ஊடாகப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் நிறையத் தேவைகள் உள்ள நிலையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகள் மட்டும் அபிவிருத்திக்காகப் போராடுகின்றமையானது மிக மிகச் சவாலான விடயம். இந்த மாவட்டத்திலே அபிவிருத்தி வேலைகளை நாங்கள் மிகுந்த சவாலாகத்தான் செய்திருந்தோம். அந்த விடயங்களின் ஊடாக எந்தவொரு திட்டத்திலுமே கோரப்படுகின்ற பணிகள் சார்பாக முதலாவது இடத்திலே மட்டக்களப்பு மாவட்டம் அடைவு மட்டத்திலே காணப்படும். அதற்கு நான் காரணமல்ல உங்கள் எல்லோருடைய பங்களிப்பிலே நேரம் காலம் பாராது நீங்கள் செய்த சேவையும் சவால்களுக்கு நீங்கள் முகம் கொடுத்து அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து, நிமிர்ந்து நின்று நீங்கள் செய்த சேவைதான் காரணம். அந்த நிமிர்ந்து நிற்கின்ற தன்மையின் ஊடாகத்தான் பல அமைச்சுக்களிடமிருந்து பல திணைக்களங்களிடமிருந்து நிதிஒதுக்கீடுகளைப் பெறக்கூடியதாக இருந்தது.
அவர்களிடம் கொடுத்தால் சரியாகச் செய்வார்கள், நிறைவாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையின், அபிப்பிராயத்தின் ஊடாகத்தான் பெற்றுக் கொண்டோம். அதிகாரத்தின் ஊடாகப் பெறுகின்ற நிலையை மாற்றி அபிப்பிராயத்தின் ஊடாகப் பெறுகின்ற நிலைக்கு மாற்றியிருக்கிறோம். எனவே அந்த நிலை தொடர வேண்டும். தேவைகள் அதிகம் இருந்தாலும், அந்தத் தேவைகளுக்கான அனுமதிகளைப் பெறுவது மிக மிகப் போராடுகின்ற ஒரு விடயம். கட்டுநிதியைக் விடுவிப்பதற்குக் கூட எத்தனைனோ அழுத்தங்கள் இருந்தாலும் மட்டக்களப்புக்குக் கொடுத்தால் அது செலவளிக்கப்படும் என்ற காரணத்தினை வைத்துக் கொண்டு ஒரு நாளில் 500 மில்லியன், 600 மில்லியன், 800 மில்லியன் என்று கட்டுநிதியை ஒரு நாளில் விடுவித்த வரலாறுகள் உண்டு.
அது தொடவேண்டும், புதிய நிருவாகத்திற்கு தடைகளை ஏற்படுத்தாது அனைவருமே இணைந்து நல்ல விடயங்களைக் காணவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றேன். ஏனென்று சொன்னால் சில இடங்களில் ஆரம்பிக்கின்ற விடயங்கள் அப்படியே நின்றுபோகின்ற நிலையைக் கண்டிருக்கிறேன். அந்த நிலைமை இந்த மாவட்டத்திற்கு நடக்கக்கூடாது. புதிய அத்தியாயம் சிறப்பான இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடத்தப்படும் வாணிவிழா நிகழ்வில்உதவி மாவட்டச் செயலாளர் ;ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதம உள்ளக கணக்காளர் எஸ்.தேவகாந்தன், கணக்காளர் கே.பிரேம்குமார், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தயாபரன், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள்  இவ்விழாவல் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவில், பஜனை, ஆன்மீகச் சொற்பொழிவுகள், நடன நிகழ்வுகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. வருடா வருடம் பாடசாலைக்கு புதிதாகச் செல்லும் 15 மாணவர்களுக்கு மாவட்ட செயலகத்தினால்  வழங்கப்படும் கலைவாணி கல்வி உதவிகளும் அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டன.