விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

0
343

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன்  வித்தியா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என  வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வித்தியா  படுகொலை வழக்குடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியே குறித்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை (30)வடக்கில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலைக்கு முழுமையான நீதி வேண்டும் என தெரிவித்து குற்றவாளிகள் தப்பிக்க உதவினார்கள் என கூறப்படும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் மற்றும் சட்டத்தரனி தமிழ்மாறன், மற்றும் கொலை குற்றவாளியான சுவிஸ்குமார் ஆகியோரின் படங்கள் உள்ளடக்கிய சுவரொட்டியே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளது.

தீவக மக்களும், யாழ் பெண்கள் அமைப்புகளும் இணைந்து குறித்த சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன்வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய  9 பேரில் எழுவர் நேற்று முன்தினம் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டதுடன் அவர்களுக்கு  மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.