தாமரைப்பூ அனைவரது அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டது. – மறுகின்றனர் பிரதேசசபை, செயலகத்தினர்.

0
451

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை, வெல்லாவெளி பிரதான வீதியின் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த தாமரைப்பூ எல்லோரிடைய அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டதென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.ஜெயமுரளி தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான பிரதியமைச்சர் ஏ.எச்எம்.அமீர் அலி தலைமையில் இன்று(28) வியாழக்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

அம்பிளாந்துறை சந்தியில் இருந்து உடைக்கப்பட்ட, தாமரைப்பூ சின்னத்த்தினை மீண்டும் அமைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்ட போது, குறித்த இடத்தில் தாமரைப் பூ அமைந்திருக்கவில்லை. வேறுயொரு சின்னமொன்றே அமைந்திருந்தது. அதனையும் சிவில்சமூகம், பிரதேசசபை போன்றவற்றில் அனுமதியினைப் பெற்றே உடைத்தோம் என தொழிநுட்ப உத்தியோகத்தர் கூறினார்.

இதனை மறுதலித்த பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர், இதனை உடைப்பதற்கு தம்மிடம் எவ்வித அனுமதியினையும் பெறவில்லையென குறிப்பிட்டனர். இதன்போது, தாமரைப்பூ அமைக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறியதுடன், அதற்கான உதவிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குறித்த சந்தியில் தாமரைப்பூ அமைக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.